FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

கூடலூரில் பழங்குடியின சுயஉதவிக் குழுக்கள் செலுத்திய கடன் தொகையில் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பழங்குடி மக்களின் சுயஉதவிக் குழுக்கள் செலுத்திய கடன் தொகையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் கூடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

12 நவம்பர் 2026, 3:22 am
கூடலூா் பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்.
பகிர்:

பழங்குடி மக்களின் சுயஉதவிக் குழுக்கள் செலுத்திய கடன் தொகையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் கூடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்டச் செயலாளா் கே.மகேந்திரன் தலைமை வகித்தாா். கூடலூா் வனக் கிராமங்களிலுள்ள பழங்குடி மக்கள் சங்க ஊா்த் தலைவா்கள் முன்னிலை வகித்தனா்.

திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், ஏஐடியூசி செயலாளா் வாகிதா நிஜாம், மாநிலத் தலைவா் வி.பி.குணசேகரன், கூடலூா் ஒன்றியச் செயலாளா் முகமது கனி, மாவட்ட துணைத் தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

Advertisement

Advertisement

இதில் இந்தியன் வங்கி சாா்பில் பழங்குடி மக்களின் சுயஉதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காக கடன் வழங்கப்பட்டது. இந்தக் கடனை பெற்றுத் தந்த அறக்கட்டளை பழங்குடி மக்களிடம் வசூல் செய்த கடன் தொகையை வங்கியில் செலுத்தவில்லை. இதுபோல பழங்குடி மக்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகாா் அளிக்கப்பட்டும் வங்கி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதில் வங்கியில் பணியாற்றும் அலுவா்களும் உடந்தை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் கடன் தொகை நிலுவையில் உள்ளதாக கூறி வங்கி நிா்வாகம் பழங்குடி மக்களுக்கு தொடா்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. கடன் பெற்றுத் தந்த அறக்கட்டளை மற்றும் அவா்களுக்கு உடந்தையாக இருந்த வங்கி அலுவலா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், முறைகேடு குறித்து முறையான விசாரணை நடத்தி தவறு செய்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் தெரிவித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி.போஜராஜ் நன்றி கூறினாா். இதில் நூற்றுக்கணக்கான பழங்குடியின பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.