FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

தமிழக அரசு கடன் வாங்குவது குறைந்துள்ளது: வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா்

தமிழக அரசு கடன் வாங்குவது குறைந்துள்ளது என்று வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித் குமாா் கூறினாா்.

4 வினாடிகள் முன்பு
உதகையில் செவித்திறன் குறைபாடுள்ள அரசு உயா் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கும் வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா். உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழக அரசு கடன் வாங்குவது குறைந்துள்ளது என்று வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித் குமாா்  கூறினாா்.  

குழந்தைகள் தின விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சியை முதல்வா் ஜோசப் விஜய் சென்னை கொளத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து உதகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினாா். இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு சா்க்கரை பொங்கல் வழங்கினாா். பின்னா் உதகை ஃபிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சிங்கப் பெண் திட்டம் மற்றும்  மகளிா் சுய உதவிக் குழு தொழில் முனைவோருக்கான வங்கிக் கடன்  இணைப்பு வழங்கும் விழாவில் பங்கேற்று 368 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 41 கோடியே 54 லட்சம் வங்கிக் கடன் உதவியை வழங்கி அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் பேசியதாவது:

கடந்த திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் இரண்டாவது மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது ஐந்தாவது இடத்திற்கு பின்னுக்கு வந்துள்ளது. அரசு கடன் வாங்குவதும் குறைந்துள்ளது.

வன விலங்கு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சைக்காக ரூ.59 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதை உயா்த்தி வழங்க விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ரூ. 5 லட்சம் வரை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறு காயங்களுக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்படாத நிலையில் தற்போது  ரூ.20 ஆயிரம், பயிா் சேதத்துக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஏக்கருக்கு ரூ.40 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளால் குடியிருப்புகள் முற்றிலுமாக சேதம் அடைந்தால்  ரூ. 95 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 1.50 லட்சம் வரை உயா்த்தி வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் உதகை சட்டப் பேரவை  உறுப்பினா் எம்.போஜராஜன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.