கொடிகாத்த குமரன் நகர் பகுதியில் அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு
கொடிகாத்த குமரன் நகர் பகுதியில் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தார் சாலை, சாக்கடை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொடிகாத்த குமரன் நகர் பகுதியில் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தார் சாலை, சாக்கடை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
வாரந்திர மக்கள் குறை தீர் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
கொடிகாத்த குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கொடிகாத்த குமரன் நகர் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக அடிப்படைத் தேவைகளான குடிநீர், தார் சாலை, சாக்கடை என எதுவும் இல்லாமல் உள்ளதால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் 32ஆவது வார்டு மற்றும் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்து கட்சியினர் சார்பில் அளித்த மனுவில், திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள லட்சுமி நகர் திரையரங்கு சாலை, பிச்சம்பாளையம், 32ஆவது ஊத்துக்குளி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் மற்றும் பனியன் கம்பெனிகளுக்குச் சென்று இரவு நேரம் வீடு திரும்பும் பெண்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் இருந்து டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி பாசனத் திட்டம், சோழமாதேவி கிராம ராஜவாய்க்கால் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் அளித்த மனுவில், திருப்பூர், மடத்துக்குளம் பகுதியில் அரசு குடிமராமத்துப் பணி தொடங்கப்பட்டு திடீரென எந்தவித காரணமும் இன்றி பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், ஆதித் தமிழர் பேரவை சார்பில் அளித்த மனுவில், திருப்பூரில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் நெருப்பெரிச்சல், ஜெ.ஜெ.நகர், முந்திரித் தோப்பு மற்றும் சமத்துவபுரம் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் அறிவொளி நகர், மன்னரை, நகரமரத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய அருந்ததிய மக்களாக உள்ளனர். எனவே, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.