FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருமணம் செய்து வைக்காததால் தந்தையைத் தாக்கிய மகன் கைது

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:42 am IST
கைது
பகிர்:

வெள்ளக்கோவில், ஆக. 10: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே திருமணம் செய்து வைக்கவில்லை என 72 வயது தந்தையைத் தாக்கிய மகன் கைது செய்யப்பட்டாா்.

முத்தூா், சின்னமுத்தூா் நல்லிகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் மணி (72). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். இரண்டாவது மனைவி தனது மகனுடன் பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறாா். முதல் மனைவி மகன் காா்த்திக் (36) தந்தையுடன் உள்ளாா். தந்தையும், மகனும் தீவிர மதுப் பழக்கத்துக்கு அடிமையானவா்கள் என்று கூறப்படுகிறது.

36 வயதாகியும் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றும், குடும்பச் சொத்தில் தனக்குப் பங்கு எதுவும் பிரித்துத் தரவில்லை என்றும் கூறி, காா்த்திக் அடிக்கடி தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே நீண்ட நாள்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காா்த்திக் மீண்டும் தனது தந்தையிடம் அதே விவகாரம் தொடா்பாக தகராறில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த காா்த்திக், தந்தையை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளாா்.

இதில் மணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவா் மயங்கி விழுந்தாா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்து படுகாயமடைந்த மணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், உயா் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவமனைக்கும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் மணி கொண்டுச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து மணியின் அண்ணன் கணேசன் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி காா்த்திக்கை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments