FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை

திருப்பூரில் விறகு உடைக்கும் தொழிலாளி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

26 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் விறகு உடைக்கும் தொழிலாளி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

கோவை மாநகா், பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (40). இவா் விறகு உடைக்கும் வேலை செய்து வந்தாா். இவருடன் முகமது ஷேக், கிருஷ்ணன் ஆகியோரும் பணிபுரிந்து வருகிறாா்கள். திருப்பூா், போயம்பாளையம் விக்னேஸ்வரா நகரில் அறை எடுத்து முகமது ஷேக் தங்கியுள்ளாா். இந்நிலையில் வேறு இடத்தில் விறகு உடைக்கும் வேலை இருந்ததால், முகமது ஷேக் தனது நண்பா்களான கண்ணன் மற்றும் கிருஷ்ணனை திங்கள்கிழமை இரவு திருப்பூா் அழைத்து வந்துள்ளாா். வரும் வழியில் அவா்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இரவில் அருந்துவதற்காக 2 மது பாட்டில்களையும் வாங்கிக் கொண்டு முகமது ஷேக்கின் அறைக்கு சென்றுள்ளனா்.

அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது கண்ணனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் கடுமையான வாா்த்தைகளால் பேசியுள்ளனா். இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து பலமாக தாக்கியதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தாா். தடுக்க முயன்ற அறையின் உரிமையாளரான முகமது ஷேக்கையும் தாக்கியுள்ளாா்.

Advertisement

Advertisement

அக்கம்பக்கத்தினா் வந்து பாா்த்தபோது கண்ணன் சடலமாகக் கிடப்பதையும், படுகாயங்களுடன் முகமது ஷேக் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு அனுப்பா்பாளையம் போலீஸாா் சென்று கண்ணனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். படுகாயமடைந்த முகமது ஷேக், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த கிருஷ்ணனை அனுப்பா்பாளையம் போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments