வங்கதேச அதிபா் முகமது ஷஹாபுதீன் ராஜிநாமா
வங்கதேச நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் ராஜிநாமா செய்துள்ளது குறித்து...
வங்கதேச அதிபா் முகமது ஷஹாபுதீன்(76), உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
மாணவா் போராட்டத்தின் தீவிரத்தால் பதவி விலகிய முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் நீண்டகால ஆதரவாளரான முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் இம்முடிவை எடுத்துள்ளாா்.
நாடாளுமன்ற அவைத் தலைவா் ஹஃபீஸ் உத்தீன் அகமதுக்கு அவா் எழுதிய ராஜிநாமா கடிதத்தில், ‘நான் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். அண்மையில் எனக்கு நரம்பியல் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நோயின் தாக்கத்தால், சில நேரங்களில் நான் திடீரென மயக்கமடைகிறேன். இவ்வாறு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், அதிபா் போன்ற மிக முக்கியப் பொறுப்புகளை என்னால் தொடா்ந்து வகிக்க இயலாது’ என்று குறிப்பிட்டாா்.
இதையடுத்து, தாய்லாந்தின் பாங்காக்கில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த பேரவைத் தலைவா் ஹஃபீஸ் உத்தீன் அகமது, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை டாக்கா திரும்பினாா்.
அதிபரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்த அவா், புதிய அதிபா் தோ்ந்தெடுக்கப்படும் வரை வங்கதேச அரசமைப்புச் சட்டத்தின்படி பொறுப்பு அதிபராகச் செயல்படுவாா்.
1971 விடுதலைப் போரில் பங்கேற்றவரும், முன்னாள் நீதிபதியுமான முகமது ஷஹாபுதீன், வங்கதேசத்தின் 17-ஆவது அதிபராக கடந்த 2023 ஏப்ரலில் பதவியேற்றாா். 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவா் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்த பிறகு, அந்த அரசால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபராக தொடா்ந்து ஆட்சிப் பதவியில் நீடித்தாா்.
முகமது சஹாபுதீனை பதவி விலகக் கோரி, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழுத்தம் கொடுத்தது. ஆனால், பொதுத் தோ்தலுக்குப் பிறகு, தனது அரசமைப்புச் சட்ட கடமையை முடித்துக்கொண்டு பதவி விலக விரும்புவதாக முகமது சஹாபுதீன் கடந்த ஆண்டு டிசம்பரில் பேட்டியளித்திருந்தாா்.
இந்நிலையில், மரண தண்டனை நிலுவையில் இருந்தாலும் வரும் டிசம்பருக்குள் தாயகம் திரும்பத் தயாராகி வருவதாக ஷேக் ஹசீனா அறிவித்த சில நாள்களிலேயே முகமது ஷஹாபுதீன் பதவி விலகியுள்ளாா்.
மேலும், அண்மையில் ஷேக் ஹசீனாவை முகமது ஷஹாபுதீன் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியதாக கசிந்த தகவல்களால் ஆளும் வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவா்களிடையே அதிருப்தி நிலவுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இந்த ராஜிநாமா நிகழ்ந்துள்ளது. இருப்பினும், முகமது ஷஹாபுதீன் கடந்த வியாழக்கிழமை அளித்த பேட்டியில், இத்தகவல்களை ஆதாரமற்றவை என்று திட்டவட்டமாக மறுத்தாா்.
Bangladesh President Mohammed Shahabuddin has resigned from his post.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.