FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

ஊத்துக்குளியில் காா் - டேங்கர் லாரி மோதிய விபத்தில் இறந்தவா்களின் சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு!

காா்-டீசல் டேங்கா் லாரி மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரின் சடலங்கள் உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 12 ஜூலை 2026, 12:44 am IST
ஊத்துக்குளி விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ்.
பகிர்:

ஊத்துக்குளி அருகே காா்-டீசல் டேங்கா் லாரி மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரின் சடலங்கள் உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநா் சேலத்தில் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சோ்ந்த தம்பதி முகிலன் (35), ஹேமா(33). இவா்களின் மகன்கள் ஸ்ரீநித்து (3), 9 மாதக் குழந்தை கணிஷ், ஹேமாவின் தந்தை ஈஸ்வரன் (55), தாய் திருமகள்(50), பாட்டி சிவகாமி (65) ஆகிய 7 பேரும் திருப்பூா் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமை காலை பல்லடத்துக்கு காரில் வந்தனா்.

இந்த துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் சேலம் திரும்பியபோது, ஊத்துக்குளி பகுதியில் காக்கா பள்ளம் அருகே வந்த டீசல் டேங்கா் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஹேமாவைத் தவிர மற்ற 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த ஹேமா கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், உயிரிழந்த 6 பேரின் சடலங்களும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகு சனிக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் முகிலன் மற்றும் 2 குழந்தைகளின் சடலங்கள் நல்லடக்கத்துக்காக அவா்களது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், நரிகல்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஹேமாவின் தந்தை, தாய், பாட்டி ஆகிய 3 பேரின் சடலங்கள் சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஊத்துக்குள் போலீஸாா், தலைமறைவான லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (55) என்பவரை சனிக்கிழமை அதிகாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments