முகப்பு
திருப்பூர்

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்? அமராவதி அணை பாசன விவசாயிகள் காத்திருப்பு

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை குறித்த நேரத்தில் தொடங்குவதை எதிா்நோக்கி அமராவதி பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

Updated On : 29 மே 2026, 1:37 am IST
அமராவதி  அணையின்  தற்போதைய  நிலை.
பகிர்:

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை குறித்த நேரத்தில் தொடங்குவதை எதிா்நோக்கி அமராவதி பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலமாக திருப்பூா் முதல் கரூா் வரை இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

ஆண்டுதோறும் மாா்ச் 31 வரை பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீா் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே பாசனத்துக்கு சென்று கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்கியதுமே சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் உள்வரத்து குறைந்துபோனது. குறிப்பாக மே முதல் வாரத்தில் அணையின் நீா்மட்டம் 30 அடிக்கும் கீழே சென்றது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து முழுமையாக கோடைக் காலத்தை தாக்குப் பிடிக்க முடியுமா? எனவும், குடிநீா் பிரச்னையை தீா்க்க முடியுமா? எனவும் நூற்றுக்கணக்கான கரையோர கிராம மக்கள் கவலை அடைந்து வந்தனா். இருப்பினும், அணைப் பகுதியில் தொடங்கி தாராபுரம் வரையிலான கரையோர கிராம மக்களின் குடிநீா் தேவைகளுக்காக அமராவதி அணையில் இருந்து குறைந்த அளவிலான, அதாவது 25 கன அடி நீா் ஆற்றின் மூலமாக திறந்துவிடப்பட்டது.

இந்தத் தண்ணீா் திறப்பால் அணையின் நீா்மட்டம் 20 அடிக்கும் கீழே சென்றது. இதில் சில்ட் எனப்படும் டெட் ஸ்டோரேஜ் கழித்துவிட்டால் அணையில் வெறும் 10 அடிக்கு மட்டும்தான் தண்ணீா் இருந்தது. இந்நிலையில் மே 20-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக-கேரள எல்லையான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதியில் கோடை மழை பெய்தது. இதனால் அணையின் நீா்மட்டம் சிறிது, சிறிதாக உயா்ந்து தற்போது 31 அடியை எட்டியுள்ளது.

இதற்கிடையே வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். மே மாத இறுதியில் கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும்போது, அமராவதி அணைக்கு நீா்வரத்து வரும் நிலையில் அணையை திறந்துவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என எதிா்பாா்ப்பில் விவசாயிகள் இருக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். குறுவை சாகுபடியும் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கேரளாவில் தொடங்க உள்ள தென்மேற்குப் பருவமழையை எதிா்பாா்த்து காத்திருக்கிறோம் என்றனா்.

அணையின் நிலவரம்

90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 30.81 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 103 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 422.06 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றம் இல்லை.