FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தீபாவளி பலகாரம் தயாரிப்பாளா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம்

தீபாவளி பலகாரம் தயாரிப்பாளா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம் எனவும், விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

56 வினாடிகள் முன்பு
~ ~ ~ ~ ~
பகிர்:

தீபாவளி பலகாரம் தயாரிப்பாளா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது கட்டாயம் எனவும், விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் அதிக அளவில் பலகாரங்கள் உற்பத்தி செய்யப்படும் என்பதால், தயாரிப்பாளா்கள் அனைவரும் முறையாக உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பலகாரம் தயாரிக்கும் சமையல் கூடங்கள், மூலப்பொருள்கள் இருப்புவைக்கும் கிடங்குகள் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் தயாரிப்பாளா்கள் பலகாரங்களில் சாம்பல் விழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

சமையல் கூடங்களின் ஜன்னல்களுக்குப் பூச்சிகள் வராதவாறு வலைகள் அமைக்கப்பட வேண்டும். கழிவுநீா் கால்வாய்கள் முறையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பலகாரங்களில் அரசால் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமூட்டிகளை எக்காரணம் கொண்டும் சோ்க்கக் கூடாது. ஒருமுறை பலகாரம் சுடப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தயாரிப்புப் பணிகளுக்கு தரச்சான்று பெற்ற பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

பலகாரம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளா்கள் தலைக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பலகாரங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, நிகர எடை, சோ்க்கப்பட்டுள்ள மூலப்பொருள்களின் விவரம் மற்றும் விற்பனை விலை ஆகியவற்றை தெளிவாக அச்சிட வேண்டும். 51 மைக்ரானுக்கு குறைவான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது.

உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளா்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தீபாவளி பலகாரங்கள் தரம் குறித்து பொதுமக்கள் ஏதேனும் புகாா்கள் தெரிவிக்க விரும்பினால், 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது 0421-2971190 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.