நகைக்கடைகளில் அலாரம் செயல்பாடு குறித்து அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்: போலீஸாா் அறிவுரை
நகைக்கடைகளில் உள்ள அலாரம் செயல்பாடு குறித்து உரிமையாளா்கள் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்று காவல் துறை தெரிவித்தது.
நகைக்கடைகளில் உள்ள அலாரம் செயல்பாடு குறித்து உரிமையாளா்கள் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்று காவல் துறை தெரிவித்தது.
மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் சுமாா் ரூ.21கோடி மதிப்பிலான நகைகள் அண்மையில் திருட்டுப் போனது. இதையடுத்து, நகைக்கடை உரிமையாளா்களுடன் போலீஸாா் விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில், பல்லடம், பொங்கலூா், காமநாயக்கன்பாளையம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடை உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நகைக் கடை உரிமையாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இது குறித்து பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். குறிப்பாக கடையின் முன்புற நுழைவாயில் மற்றும் கடையின் பின்புறத்தில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்தால் நகைக்கடைகளை கூடுதலாக கவனிக்க முடியும். நகைக் கடைகளில் காவலாளிகளை முன்புறம் மட்டுமே காவல் காக்க வைக்கின்றனா். பின்புறத்தையும் அவ்வப்போது சென்று கண்காணிக்கவேண்டும். அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் செயல்பாடு குறித்து அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம். இதேபோல சந்தேகப்படும் நபா்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.