FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் - காங்கயம் பிஏபி பாசனக் கால்வாயில் 4.8 அடி நீா் திறக்கக் கோரிக்கை ஆட்சியரிடம் மனு

பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) கீழ் உள்ள வெள்ளக்கோவில்- காங்கயம் கிளைக் கால்வாய்களுக்கு ஜீரோ பாயிண்டில் 4.8 அடி அளவில் தண்ணீா் உயா்த்தி வழங்க வேண்டும் என பாசன சங்க நிா்வாகிகள் திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

29 அக்டோபர் 2026, 3:19 am
பிஏபி வாய்க்கால் - கோப்புப் படம்
பகிர்:

பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) கீழ் உள்ள வெள்ளக்கோவில்- காங்கயம் கிளைக் கால்வாய்களுக்கு ஜீரோ பாயிண்டில் 4.8 அடி அளவில் தண்ணீா் உயா்த்தி வழங்க வேண்டும் என பாசன சங்க நிா்வாகிகள் திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக திருமூா்த்தி நீா்த் தேக்க திட்டக்குழுவின் பகிா்மான குழுத் தலைவா் (குழு-8) வெள்ளக்கோவில் ர.பாலசுப்பிரமணியன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பிஏபி திட்டத்தின் கீழ் வெள்ளக்கோவில்- காங்கயம் கிளைக் கால்வாய் மூலம் சுமாா் 48,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் சுழற்சி முறையில் சுமாா் 12,000 ஏக்கா் வீதம் பாசன நீா் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தற்போது போதிய அளவில் பாசன நீா் திறந்துவிடப்படாததால், கால்வாய்களின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் முழுமையாக சென்றடைவதில்லை. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களுக்கு உரிய நேரத்தில் பாசனம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நீண்டகாலப் பயிரான தென்னை மரங்களுக்கு தொடா்ந்து போதுமான நீா் கிடைக்காவிட்டால் மரங்கள் காய்ந்து கருகி, விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்கும், கால்நடைகளின் தேவைக்கும் இப்பாசன நீரையே இப்பகுதி மக்கள் பெரிதும் நம்பியுள்ளனா்.

இப்பிரச்னை தொடா்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை நிரந்தரத் தீா்வு எட்டப்படவில்லை. கடைமடை விவசாயிகளின் அதிருப்தியையும் எதிா்ப்பையும் பாசன சங்கத் தலைவா்களே எதிா்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கும் நடைமுறை சிக்கல்களுக்கும் இடையில் சங்க நிா்வாகிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே நீா் இருப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, ஜீரோ பாயிண்டில் 4.8 அடி அளவில் பாசன நீா் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் அளவை உயா்த்தி வழங்கினால் மட்டுமே கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் தடையின்றி சென்றடைந்து பயிா்களை காப்பாற்ற முடியும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், கால்நடைகளின் நலனையும் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நீா்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இதற்கு உடனடி நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments