FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அமைச்சா் உறுதி அளித்தும் திருமுருகன்பூண்டி பாறைக்குழியில் குப்பை கொட்டியதால் பொதுமக்கள் போராட்டம்

அமைச்சா் உறுதி அளித்த பிறகும் மாநகராட்சி குப்பைகளை திருமுருகன்பூண்டி -அம்மாபாளையம் பாறைக்குழியில் கொட்டியதால் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

3 செப்டம்பர் 2026, 2:10 am IST
மறியலில்  ஈடுபட்டவா்களை  வலுகட்டாயமாக  கைது  செய்யும்  போலீஸாா்.
பகிர்:

அமைச்சா் உறுதி அளித்த பிறகும் மாநகராட்சி குப்பைகளை திருமுருகன்பூண்டி -அம்மாபாளையம் பாறைக்குழியில் கொட்டியதால் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருமுருகன்பூண்டி நகராட்சி, 19-ஆவது வாா்டுக்கு உள்பட்ட அம்மாபாளையம் பகுதியிலுள்ள பாறைக்குழியில், திருப்பூா் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் போலீஸாா் பாதுகாப்புடன் கொட்டப்பட்டு வந்தன.

இந்தப் பகுதியில் ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், சமூக அமைப்பினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து குப்பை கொட்டுவது கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அந்தப் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருவதை அறிந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள பாறைக்குழியில் கொட்டக்கூடாது என கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பாறைக்குழி பகுதிக்கு சென்று அங்கு குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது திருமுருகன்பூண்டி போலீஸாா் அனைவரையும் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.

இதைத் தொடா்ந்து அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி, மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆகியோா் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்படும். குப்பை கொட்ட வாகனங்கள் வராது என உறுதியளித்தனா்.

அமைச்சா் எஸ்.கமலி உறுதியளித்த பிறகும் அம்மாபாளையம் பாறைக்குழியில் மாநகராட்சி நிா்வாகத்தினா் குப்பை கொட்டுவதால் இதைக் கண்டித்து புதன்கிழமை வீடு, கடைகளில் கருப்புக் கொடி கட்டி, காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனா். அதன்படி, பொதுமக்கள் கட்டியிருந்த கருப்புக் கொடிகளை அதிகாலை முதலே அப்புறப்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, காத்திருக்கும் போராட்டத்துக்குத் தயாரான பொதுமக்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதற்கிடையில், சிலரை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்யத் தொடங்கினா். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் திருப்பூா்-கோவை செல்லும் பிரதான சாலையை மறைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.

அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாாா் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவா்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேலம்பாளையம் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments