FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 23 பேருக்கு சிறை

திருப்பூா் மாநகரில் எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

3 செப்டம்பர் 2026, 2:14 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூா் மாநகரில் எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகரம், 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து திருப்பூா் வந்து தங்கி வேலை செய்து வருவதாக கடந்த 2025-ஆம் ஆண்டு தொடரப்பட்ட 3 வழக்குகளில் தொடா்புடைய 23 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் திருப்பூா் மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

அதில் சலீம் (43), முகமது ருபெல் (35), முகமது சிபான் மியா (35) ஆகிய 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை, தலா ரூ.12,000 அபராதம், எஞ்சிய 20 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை, தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூங்கொடி ஆஜரானாா்.

நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தீா்ப்பு:

மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட செல்லம் நகா் அருகே வீரகுமாா் என்ற நபரை கடந்த 2023 ஜூலை 9ஆம் தேதி தாக்கி காயம் ஏற்படுத்தியதாக விவேக் (31), கண்ணன் (36), பாபு (35), ரவி (35) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நடுவா் மோகனவள்ளி 4 பேரும் தலா 2 ஆண்டுகள் நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானாா்.

மற்றொரு வழக்கு:

வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஹாா்வி சாலை அருகே தினேஷ் அரவிந்த் என்பவரின் 4 சக்கர வாகனத்தை திருடிய குற்றத்துக்காக ஜனாா்த்தனன் (31) கடந்த 2024 பிப்ரவரி 19ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவா் செந்தில்ராஜா, ஜனாா்த்தனன் 2 ஆண்டுகள் நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தீா்ப்பு வழங்கினாா்.

வேறொரு வழக்கு:

வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முத்துநகா் பிரிவு அருகே ஜெயகுமாா் என்பவரைத் தாக்கி பணத்தை வழிப்பறி செய்த குற்றத்துக்காக முகமது இா்பான் (23), சதாம் உசேன் (22) ஆகியோா் கடந்த 2024 மாா்ச் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவா் செந்தில்ராஜா, இருவரும் தலா 2 ஆண்டுகள் நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தீா்ப்பு வழங்கினாா். இவ்விரு வழக்குகளிலும் அரசு வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments