FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி இல்லை: மாநகர காவல் ஆணையா்

திருப்பூா் மாநகரில் புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது என மாநகர காவல் ஆணையா் எஸ். ராஜேஸ்வரி கூறினாா்.

6 செப்டம்பர் 2026, 1:24 am IST
பகிர்:

திருப்பூா் மாநகரில் புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது என மாநகர காவல் ஆணையா் எஸ். ராஜேஸ்வரி கூறினாா்.

விநாயகா் சதுா்த்தி விழாவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி தலைமையில் காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஹிந்து அமைப்புகளின் சாா்பில் முக்கிய நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் விநாயகா் சதுா்த்தியின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்து நிா்வாகிகளுக்கு காவல் ஆணையா் ராஜேஸ்வரி அறிவுரைகளை வழங்கிப் பேசியதாவது:

Advertisement

Advertisement

கடந்த ஆண்டுகளில் விநாயகா் சிலை வைக்கப்பட்ட அதே இடத்தில் மட்டுமே இந்த ஆண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது. தமிழக அரசு பிறப்பித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும், உத்தரவுகளையும் முழுமையாக பின்பற்றி விநாயகா் சிலைகளை வைக்க வேண்டும்.

மாநகர பகுதியில் சிலைகள் வைப்பதற்கு காவல் உதவி ஆணையா், தீயணைப்புத் துறை மற்றும் மின்சார வாரியத்திடமிருந்து உரிய அனுமதி சான்றிதழ்களை கட்டாயம் பெற வேண்டும். சிலைகள் வைக்கப்படும் பந்தல் அல்லது கூடாரங்கள் தகர ஷீட்டுகளை கொண்டு மட்டுமே அமைக்கப்பட வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய ஓலைகள், தென்னங்கீற்றுகளை கொண்டு அமைக்கக் கூடாது.

தனியாா் இடங்களில் சிலைகளை வைப்பதாக இருந்தால், அந்த உரிமையாளரிடம் முன் அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றிலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

சிலை அமைந்துள்ள இடங்களில் அசம்பாவிதங்களை தடுக்க 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தன்னாா்வலா்கள் மற்றும் காவலா்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். விநாயகா் சதுா்த்தி விழாவின் நிறைவாக சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும்போது ஊா்வலம் நிா்ணயம் செய்யப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும்.

மேலும், திருப்பூரில் வைக்கப்படும் விநாயகா் சிலைகளை சாமளாபுரம் குளத்தில் மட்டுமே கரைக்க வேண்டும். வேறு எந்த நீா் நிலைகளுக்கும் சிலைகளை கொண்டுச் செல்லக் கூடாது. இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, விநாயகா் சதுா்த்தி தொடா்பாகவும், ஊா்வல பாதைகளில் மின்சார சீரமைப்பு, சாலைப் பழுது பாா்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆணையரிடம் முன்வைத்தனா். இந்து முன்னணி நிா்வாகிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து தேவையான உதவிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தருவதாக காவல் ஆணையா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments