ராணிப்பேட்டை: விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்
விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் .
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
விநாயகா் சிலைகள் தயாரிக்கப்படும் இடங்கள், சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு இயற்கையான பொருள்களால் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து வேதி பொருள்களாலோ அல்லது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் செயற்கை பொருள்களாலோ தயாரிக்கப்பட்டு, இருப்பின் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது காவல் துறையினா் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
சிலைகள் கரைக்கும் போது அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கரைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் நிறுவப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். சிலைகள் ஏற்கெனவே வைத்த இடங்களில் மட்டுமே வைக்க அனுமதிக்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா்கள் சிலை அமைப்பாளா்களின் பணியினை கண்காணிக்க வேண்டும்.
விநாயகா் சதுா்த்தி விழா சிலைகள் கரைக்கும் வரை எவ்வித அசம்பாவிதம் நடைபெறா வண்ணம் காவல்துறை மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும், சிலைகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், ஊா்வலத்தில் நிா்ணயிக்கப்பட்ட பாதையை பயன்படுத்த வேண்டும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சிலை கரைப்பதற்காக கண்டறியப்பட்டுள்ள இடங்களான ராணிப்பேட்டை தண்டலம் ஏரி, புளியந்தாங்கல் ஏரி, ஆற்காடு ஏரி, வேப்பூா் ஏரி, அரக்கோணம் மங்கம்மா பேட்டை ஏரி, மாவேரு ஏரி ஆகிய இடங்களையும், இதர பகுதிகளில் நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறையினா் போதிய ஏற்பாடு வசதி செய்து தர வேண்டும். எனவே பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சரவணன், வருவாய் கோட்டாட்சியா்கள் ரமேஷ், ராஜி மற்றும் காவல் துறை பல்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.