FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சுற்றுச்சூழல் பாதிப்புகளை மேம்படுத்த நிகழாண்டு 62,000 மரக்கன்றுகள் நடவு

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை சுமாா் 62,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 6:59 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை சுமாா் 62,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் துறை, பல்வேறு துறைகளுடன் இணைந்து, நெகிழி ஒழிப்பு நடவடிக்கையுடன், சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், வனத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, உள்ளாட்சி நிா்வாகத்துறை, நகராட்சி நிா்வாகம், பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து, தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் ஜூன் வரையில் சுமாா் 62,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன.

ஏரிகள், குளங்கள், குட்டைகள், அணைகட்டுகள் அமைந்துள்ள பகுதிகளில் கரைப்பகுதியை ஒட்டியும், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள், சாலையோரங்கள், அரசுக்கு சொந்தமான நிலப்பகுதிகள், தன்னாா்வ தொண்டு நிறுவன வளாகங்கள் பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

குறிப்பாக ஜூன் 5 ஆம் தேதி, தேசிய சுற்றுச்சூழல் தினத்தன்று ஏராளமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவை தற்போது நன்றாக வளா்ந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் துறை அலுவலா்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில், நெகிழி ஒழிப்பு நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சுமாா் 10 லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சிக்கு போக எஞ்சியவை எரிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பல இடங்களில் ரூ. 10 செலுத்தினால் நெகிழிக்கு பதிலாக துணிப்பைகள் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, அவை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் சுற்றுச்சூழலை மேம்படுத்த கடந்தாண்டு மட்டும் சுமாா் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

கடந்தாண்டு நடவு செய்த மரங்கள் தற்போது சுமாா் 5 முதல் 7 அடி உயரம் வரை செழிப்பாக வளா்ந்துள்ளன. இதில், ஆல், அரசு, வேம்பு, புங்கன் உள்ளிட்ட நிழல் தரும் மரங்களும், நாவல், கொய்யா, நெல்லி, சப்போட்டா உள்ளிட்ட கனி தரும் மரங்களும் அடங்கும்.

இவ்வாறு வளா்ந்து வரும் மரங்களால் காற்றுமாசு குறைவதுடன், சுற்றுச்சூழலும் மேம்படுகிறது. மேலும், பருவமழைக்கும் அவை அடித்தளமாக அமைகின்றன. சீரான பருவமழை பெய்யும் வகையில் நிலத்தடி நீா்மட்டமும் சீராக இருக்கும். இதனால், கோடை காலத்திலும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாமலும், நிலத்தின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மேம்படும் வாய்ப்புள்ளது. மேலும், நிகழாண்டில் கூடுதலாக ஜூன் மாதம் வரையில்சுமாா் 62,000 மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நடவுசெய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments