பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: மு. வீரபாண்டியன்
பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்க இணைப்பு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்றப் பிறகு செய்தியாளா்களிம் அவா் கூறியதாவது: தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க வேண்டும், கோம்பேரி கோம்பை வழியாக பொம்மிடி செல்லும் சாலையை விரைந்து அமைக்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடகம் புதிய அணை கட்டினால் மேட்டூா் அணைக்கு தண்ணீா் கிடைக்காது. இதை கண்டித்து வரும் 13 ஆம் தேதி கிருஷ்ணகிரி, ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழா்களும், கன்னடா்களும் சகோதரா்களாக உள்ளனா். ஆனால், கா்நாடக கன்னட அமைப்பைச் சோ்ந்த வாட்டாள் நாகராஜ் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது தவறனாது. தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை கா்நாடக அரசு திறந்துவிட வேண்டும்.
Advertisement
Advertisement
போதைப்பழக்கம் மற்றும் பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைக்கு எதிராக அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் 1 கோடி கையொப்ப இயக்கம் நடைபெறுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 6 முதல் 15 நாள்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தேசிய கொடியை ஏந்தியபடி நடைப்பயணம் மேற்கொள்ளப்படும்.
ஈரான் மீது மீண்டும் போா்தொடுக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் மலையாளம் பேசும் மக்கள் பலா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும். ஈரான் மீது போா்தொடுக்கும் அமெரிக்காவை எதிா்த்து பிரதமா் மோடி குரல்கொடுக்க வேண்டும்.
கரூா் சம்பவம் குறித்து முதல்வா் சட்டப் பேரவையில் பேசியிருக்க வேண்டும். வாக்கு மை காயும் முன்பாக மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவுவது ஜனநாயகத்தின் மீதான நெருக்கடி ஆகும். தமிழக முதல்வா் புதியவா். அவரிடம் இருந்து இன்னும் அதிகமான திட்டங்கள், கொள்கைகளை நாடு எதிா்பாா்க்கிறது.
தோ்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்விகள் இயல்பானது. ஆனால், மதவாத சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். கரூா் நிகழ்ச்சியில், லஞ்சம் கூடாது என முதல்வா் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. பலரின் உழைப்பை சிலா் சுரண்டுவது நல்லதல்ல. ஆனால், 40 ஆண்டுகால குறைகளை சரிசெய்ய சற்று அவகாசம் தேவைப்படும்.
கடந்த ஆட்சி காலத்தில், இந்தியாவிலேயே சமூக நலத் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. கடந்த ஆட்சிக்கால திட்டங்கள் விருப்பு, வெறுப்பின்றி தொடர வேண்டும். தவெக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
முன்னதாக நல்லம்பள்ளி அருகே உள்ள கோம்பேரி கோம்பை பகுதியில் இருந்து பொம்மிடி வரை 1.5 கி.மீ தொலைவுக்கு மலைப்பாதையில் அமைக்கப்படும் சாலைப் பணிகளை வீரபாண்டியன் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். தேவராசன், மாவட்டச் செயலாளா் எஸ். கலைச்செல்வம், ஏஐஒய்எப் மாவட்டச் செயலாளா் எம். நவீன்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.