அரசு பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை
தருமபுரி, மே 26: ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் குறைவாக இரு
தருமபுரி, மே 26: ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளிகளில் கல்வித் தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுவதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் அடிதட்டு மக்களுக்கு மட்டுமே அரசு பள்ளி என்ற நிலை உருவாகும் நிலை ஏற்படும் வாய்ப்பு உண்டாகியுள்ளது.
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கடந்த சில நாள்கள் முன் வரை தருமபுரி மாவட்டத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 24%-ம், 6-ம் வகுப்பில் சேர்க்கை 32%-ம், மேல்நிலை வகுப்பில் 41%-ம் குறைந்துள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Advertisement
Advertisement
தருமபுரி மாவட்டம் கல்வியறிவில் பின்தங்கியுள்ள மாவட்டம் என சில ஆண்டுகளுக்கு முன் வரை கூறப்பட்டு வந்தது. தற்போது மாநில அளவிலான இடங்களை இம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளது அனைவரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தருமபுரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஆர்.பி.ஹரிபிரசாத் தனியார் பள்ளியில் படித்தவர். ஆனால் இவரது பெற்றோர்கள் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர்.
இதேபோல் மாவட்ட அளவிலான தரப் பட்டியலில் வந்துள்ள வேறு சில மாணவர்களுடைய பெற்றோர் ஆசிரியர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். அரசு பள்ளி ஆசிரியர்களே அவர்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும்போது, மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது. தனியார் பள்ளிகளில் அதிக நன்கொடை, கல்விக் கட்டணம் தரவும் தயாராக இருக்கின்றனர்.
இம்மாவட்டத்தில் உள்ள 811 அரசு தொடக்கப் பள்ளிகளில் மே மாதத்திலே சேர்க்கை தொடங்கி உள்ளது. கடந்த வாரம் இறுதி வரை 550 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் காமராஜ் நகர் பள்ளியில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்ததால் இப்பள்ளி மூடுவதற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளாராம்.
"நகர்புறங்களில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்கவே பெரும்பாலான அரசு ஊழியர்கள் விரும்புகின்றனர். இதற்காக கிராமப் பள்ளிகளிலிருந்து நகரங்களில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் பெற லஞ்சம் கொடுக்கவும் தயங்குவதில்லை' என தருமபுரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கணேசன் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தருமபுரி மாவட்டத் தலைவர் மு.பொன்முடி குறிப்பிடுகையில், தனியார் பள்ளிகளில் படித்தால்தான் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்பது மாயை. பெற்றோர் இதிலிருந்து விடுபட வேண்டும் என்றார்.