உணவுப் பன்மயம் குறைந்ததால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்தது: எழுத்தாளர் பாமயன்
உணவுப் பன்மயம் குறைந்ததால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டதாக வேளாண் பொருளியல் அறிஞரும், எழுத்தாளருமான பாமயன் தெரிவித்தார்.
உணவுப் பன்மயம் குறைந்ததால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டதாக வேளாண் பொருளியல் அறிஞரும், எழுத்தாளருமான பாமயன் தெரிவித்தார்.
புவிதம் பள்ளி மற்றும் தருமபுரி மக்கள் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விதைத் திருவிழாவில் அவர் மேலும் பேசியது:
நிலக்கரி மற்றும் பெட்ரோல் கிடைப்பது விரைவில் முற்றிலுமாக நிற்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நிலையில் மாற்று வாழ்க்கை முறைக்கு மாற வேண்டியது கட்டாயம். இதற்கான ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
ரசாயன உரம் கலக்காமல் மேற்கொள்ளப்படுவது இயற்கை விவசாயம். எடுத்துக்காட்டாக, ஏராளம் கொட்டி நிலத்தை மலடாக்கும் யூரியாவை, ஏற்கெனவே இயற்கையாகக் கிடைக்கும் வகையில் பெற்று மண்ணில் இட்டு மேற்கொள்ளப்படுவது இயற்கை விவசாயம்.
அதாவது அதிக வெப்பநிலையில், அதிக அழுத்தம் கொடுத்து தயாரிக்கப்படும் பொருள்கள் செயற்கையானவை. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், பஞ்ச பூதங்களைச் சிதைக்காமல் மேற்கொள்ளப்படும் விவசாயம் இயற்கை விவசாயம்.
ஸ்டெரிலைட் ஆலையைத் திறக்க வேண்டும் என ஒரு தரப்பினர் தொடர்ந்து வாதம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில்தான் ஏராளமான செம்புப் பாத்திரங்கள், செம்புத் தகடுகள், காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளன.
இப்போதும் சுவாமிமலை பகுதிக்குச் சென்றால், ஏராளமானோர் உலோகங்களை எளிதாக சிறிய அளவில் உருக்கி ஏராளமான சிலைகளைச் செய்து வருகிறார்கள். இவற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவே இல்லை. ஒரே இடத்தில் குவியலாக பெரிய அளவில் மேற்கொள்ளும்போது பாதிப்புகள் எழுகின்றன.
ஏராளமான ஏரி, குளங்களை வெட்டி தண்ணீரைச் சேமித்து வைத்து நம்முடைய பாரம்பரிய முறை. ஆனால், ஆழ்துளைக் கிணறு போட்டு நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சி நாசப்படுத்துவது மேலைநாட்டு முறை. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உணவு சார்ந்த பிரச்னைகள் தீவிரமாகி வருகின்றன. குறிப்பாக உலகம் முழுவதும் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் விதைகள் புழக்கத்தில் இருக்கின்றன. தற்போது இவற்றில் 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விதைகள் தனியார் பெருநிறுவனங்களின் கைகளில உள்ளன.
இந்தியாவில் பருத்திக்கு மட்டும்தான் மரபணு மாற்றப்பட்ட விதை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சந்தையில் கிடைக்கும் 62 வகையான உணவுப் பொருள்கள் மரபணு மாற்றப்பட்டவையாக விற்பனைக்கு கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எப்படி இவையெல்லாம் வந்தன?
பாரம்பரியமாக மனிதர்கள் 150 வகைகளை உண்டு வந்தோம். இப்போது அரிசி, கோதுமை ஆகிய இரண்டைத் தவிர வேறு வகைகள் இல்லை. தொற்றும் நோய்களை முற்றிலும் ஒழித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், புற்றுநோய், நீரிழிவு, மலட்டுத் தன்மை போன்ற தொற்றா நோய்கள் மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கின்றன. விவாதங்களில் இவற்றை கவனத்தில் கொள்வதே இல்லை.
உணவுப் பன்மயம் குறைந்துவிட்டதால், மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது என்றார் பாமயன்.
திருவிழாவில், பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானியங்கள், தின்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் சூழல் சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. புவிதம் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
தொடர்ந்து உடலுக்குக் கேடு விளைவிக்காத பொருள்களை மக்களுக்கு விற்பனைக்குக் கிடைக்கும் வகையில் தொடர் கூட்டங்களையும் சந்தைகளையும் நடத்திட இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.விழாவுக்கான ஏற்பாடுகளை த. பாலசுப்பிரமணி, உமாசங்கர் மற்றும் சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.