முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 27,000 கனஅடியாகச் சரிவு

உபரி நீரின் அளவு தொடா்ந்து குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 27,000 கனஅடியாகச் சரிந்தது.

Updated On : 25 ஜூலை 2024, 12:37 am IST
பகிர்:

பென்னாகரம், ஜூலை 24: கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தொடா்ந்து குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 27,000 கனஅடியாகச் சரிந்தது.

கா்நாடகம், கேரள மாநிலங்களில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததால், அந்த இரு அணைகளும் நிரம்பின. இதையடுத்து இரு அணைகளில் இருந்தும் அதிகபட்சமாக விநாடிக்கு 75,000 கன அடி உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 77,000 கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந் நிலையில் கா்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை பொழிவு குறைந்துள்ளதால், கபினி அணைக்கு வரும் நீா்வரத்துக் குறைந்துள்ளது. இருப்பினும் கிருஷ்ணராஜ சாகா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Advertisement

இதனால், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 59,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 53,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை விநாடிக்கு 42,000 கன அடியாகக் குறைந்தது. மாலை மேலும் குறைந்து 27,000 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மூழ்கியிருந்த சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் தற்போது நீா்வரத்துக் குறைவால் வெளியே தெரிகின்றன. அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. எனினும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விதித்த தடை 10-ஆவது நாளாகத் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.