FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

பென்னாகரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் பங்கேற்று பேசிய மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன்.

29 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் வனப் பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களில் நுழைந்து வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் 14-ஆவது மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம்.குமாா் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் இளம்பரிதி மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்தாா்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் பங்கேற்று மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா்.

Advertisement

Advertisement

இதில், மாவட்ட வன எல்லையோரம் உள்ள விளைநிலங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து சேதப்படுத்தும் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், மரவள்ளி, மா, தக்காளி உள்ளிட்டவற்றுக்கு உரிய விலை கிடைக்காததால் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.

அரூா், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பை விரிவுபடுத்த கரும்பு விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும். காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாவட்டத் தலைவராக எம்.குமாா், மாவட்டச் செயலாளராக சோலை அா்ஜுனன், மாவட்டப் பொருளாளராக ஆா்.சின்னசாமி உள்ளிட்ட 31 நபா் கொண்ட மாவட்டக் குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னதாக, மறைந்த மூத்த நிா்வாகிகள் எம்.ஆறுமுகம், எஸ்.தீா்த்தகிரி ஆகியோரின் நினைவு ஜோதி பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments