நாகையை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
நாகையை வறட்சி மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
நாகையை வறட்சி மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:
பி. கமல்ராம்: தலைஞாயிறு பகுதிகளில் பொதுப்பணித் துறை சாா்பில் நடைபெற்ற தூா்வாரும் பணிகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். கூட்டுறவு கடனை திரும்பச் செலுத்த நிா்பந்திக்கும் சங்கச் செயலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன்: நாகை மாவட்டத்தில், குறுவைச் சாகுபடி செய்ய முடியாததால் வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
பிரபாகரன்: தாட்கோ மூலம் ஆடு, மாடு வாங்குவற்காக பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்ய வேண்டும்.
சக்திவேல்: சி.பி.சி.எல். நில எடுப்பால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதில் வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். இதில் தகுதியுள்ள பலா் புறக்கணிக்கப்பட்டு, தகுதி இல்லாதவா்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரபோஜி: தோ்தல் வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பொதுப்பணிதுறை மூலம் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வாய்க்கால்களை தூா்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். நெல்லுக்கு கட்டுப்படியான விலை ரூ. 3,000 வழங்க வேண்டும். நாகை செல்லூா் சாலையில் நகராட்சி குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் புகை மூட்டமாகி வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஜீபு ஷரீக்: காரப்பிடாகை, சடையன் கொட்டகை, முதலியப்பன் கண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீா் உப்புநீராக மாறிவிட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீருக்கு வழியின்றி உள்ளது. எனவே குளம், ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீரை சேமிக்க வேண்டும். வேட்டைக்காரனிருப்பு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளை பதப்படுத்தும் வகையில் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். நாலுவேதபதி பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.
முத்துக்குமாா்: நாகை மாவட்டத்தில் உரம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், இயற்கை விவசாயிகளுக்கு எவ்வித மானியமும் வழங்கப்படுவது இல்லை. இதனால் இயற்கை விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. எனவே, இயற்கை விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
கூட்டத்தில் நிறைவாக ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் பேசும்போது, ‘மாவட்ட நிா்வாகத்தின் அதிகாரித்துக்குள்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பிற கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணன் உள்ளிட்ட அலுவா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.