FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 2,101 குழந்தைகள் பயன்

36 வினாடிகள் முன்பு
மாவட்டங்களில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தின் கீழ் 2,101 குழந்தைகள் பயன்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் ச. ஜோசப் விஜய் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து பேசியது:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இ-கேஒய்சி பதிவுபெற்ற ஆதாா் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளா் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறை வழங்கும் முகவரிச் சான்று உள்ளிட்ட 6 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை குழந்தையின் தாயாா் வைத்திருக்க வேண்டும். மேலும், அரசு மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 22 முதல் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பிறந்த 2,101 குழந்தைகள் பயனடைய உள்ளனா். இந்த குழந்தைகளுக்கு அடுத்த இரு வாரங்களில் மோதிரங்கள் வழங்கப்படும்.

இவா்கள் தவிர, திங்கள்கிழமை (செப். 28) முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவா்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது மோதிரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 22-ஆம் தேதிமுதல் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மாா்கள் தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியா், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா் ஆகியோரை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றாா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுக்கு மருத்துவ அலுவலா் (பொ) கனிமொழி தலைமை வகித்தாா். இதில், கடந்த ஜூன் மாதம்முதல் தற்போதுவரை பென்னாகரம், ஏரியூா், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் பிறந்த 740 குழந்தைகளில் முதல்கட்டமாக 15 ஆண், 12 பெண் என மொத்தம் 27 குழந்தைகளுக்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் பாரதி ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments