FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, ஒசூரில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, ஒசூரில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஒசூர் கோட்டம் உத்தனப்பள்ளி அருகே அகரம் முருகன் கோயில், ரயில் நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோயில், முனீஸ்வர் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோயில், சூளகிரி காசி விஸ்வநாதர் கோயில், மலை கோயிலான சந்திரசூடேஸ்வரர் கோயிலில் உள்ளிட்ட சிவாலங்களில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ரயில் நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோயிலில், ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகனுக்கு விபூதி, சந்தனம்,பாலாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. 
சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், மகா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோவிலில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவையொட்டி, அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஏராளமான ஆண்,பெண் பக்தர்களும், சிறுவர்,சிறுமிகளும் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், மேள தாளத்துடன் உற்சவர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இதேபோல் உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் முருகன் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 
பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மலைக் கோயிலான சந்திரசூடேஸ்வரர் முருகன் சன்னதியில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஜெகதேவி, பேருஹள்ளி உள்ளிட்ட முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி பாலசுப்பிரமணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே அலகு குத்தியும், பால் காவடி, மலர் காவடி, மயில் காவடி, பால் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றனர். ஆடிக் கிருத்திகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பர்கூரை அடுத்த ஜெகததேவி கிராமத்தில் உள்ள அருள்மிகு பால விநாயகர், பாலமுருகன் கோயிலின் 71-ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா சனிக்கிழமை தொடங்கியது. ஆடிக் கிருத்தியை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் யாகசாலை பூஜை, நவகிரக ஹோமம், அருள்மிகு முருகனுக்கு பால் அபிஷேகம், அலங்கார பூஜைகளும் அராதனைகளும், இடும்பன் பூஜையும் நடைபெற்றன.  நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அரை அடி முதல் 100 அடி நீளம் கொண்ட அலகு குத்தியும்,  பால் காவடி, மயில் காவடி, மலர் காவடி ஏந்தியும், கல் உரல், இரும்புச் சங்கிலி, டிராக்டர் உள்ளிட்டவைகளை அலகுகளுடன் இணைத்து முதுகில் குத்தி இழுத்து சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 
மாலையில் நடைபெற்ற நிகழ்வில் பக்தர்கள் பழனி, முருகன், ராமன், அருண்குமார் ஆகியோர் செலுத்திய சிறப்பு நேர்திக்கடன் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்கள், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பர்கூர் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக.6-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் அருள்மிகு பாலமுருகன் வள்ளி, தெய்வானை திருமண விழா நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அருள்மிகு பாலமுருகன் வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லாக்கில் பவனியும், வாண வேடிக்கையும் நடைபெறுகிறது. 
ஊத்தங்கரையில்... ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக் கிருத்திகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஆடிக் கிருத்திகையையொட்டி முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் தேர் இழுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும்  பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments