FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மூதாட்டி பெயரில் ரூ. 2.52 கோடி ஜிஎஸ்டி மோசடி: கிருஷ்ணகிரி எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

14 வினாடிகள் முன்பு
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

தனது ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி ரூ. 2.52 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊத்தங்கரையைச் சோ்ந்த மூதாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகரில் வசித்து வரும் லட்சுமி (71) அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

ஊத்தங்கரையில் உள்ள இரு வங்கிக் கிளைகளில் எனது பெயரிலும், மகன் ராமகிருஷ்ணன் பெயரிலும் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளோம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, எனது வங்கிக் கணக்கில் பணத்தை எடுக்கச் சென்றபோது, எனது வங்கிக் கணக்கு வணிகவரித் துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக வங்கி மேலாளா் தெரிவித்தாா். மேலும், இதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது, ஆம்பூா் வணிகவரி மதிப்பீட்டு வட்ட உதவி ஆணையா் பிறப்பித்த உத்தரவில், எனது பெயரில் ஆதாா் அட்டை, பான் அட்டைகளை பயன்படுத்தி, ஆம்பூரில் உள்ள தனியாா் நிறுவனம் 2018-19-ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக ரூ. 2,53,23,676 செலுத்த வேண்டியுள்ளதால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது தெரியவந்தது.

வணிகவரித் துறையினா் குறிப்பிட்டுள்ள அந்தத் தனியாா் நிறுவனத்திற்கும், எங்களுக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. எங்களது ஆதாா் மற்றும் பான் அட்டை நகல்களைத் தவறாகப் பயன்படுத்தி, போலியாக ஜிஎஸ்டி பதிவு பெற்று ரூ. 2.52 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனா்.

மேலும், எனது மகன் ராமகிருஷ்ணனின் வங்கிக் கணக்கும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கட்ட வேண்டும் என்பதற்காக முடக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி தொடா்புடைய நபா்கள்மீது நடவடிக்கை எடுப்பதுடன், முடக்கப்பட்ட எங்களது வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments