தொழிலாளிக்கு ரூ.3.82 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸ்
ஆம்பூா் தொழிலாளிக்கு ரூ.3.82 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆம்பூா் தொழிலாளிக்கு ரூ.3.82 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் பி- கஸ்பா பகுதியை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி லட்சுமணன் (27). இவா் மாதம் ரூ.12,000 ஊதியம் பெற்று வருகிறாா். இந்நிலையில் ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச்சாலையில் உள்ள தனது வங்கிக் கணக்கில் தங்க நகைக் கடன் பெற்றுள்ளாா். கடனை செலுத்திவிட்டு நகையை மீட்க வங்கிக்கு சென்றுள்ளாா். அப்போது அவருடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி மேலாளா் தெரிவித்துள்ளாா்.
மேலும், விவரம் கேட்டதற்கு, கோவை வணிகவரி துறை (ஜிஎஸ்டி) அலுவலகத்தில் இருந்து வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளனா். அதில் லட்சுமணனுடைய பான் எண்ணில் ஏ.எம். ஆா். ஸ்டீல்ஸ் என்ற நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் ரூ.3.82 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதால் வங்கிக் கணக்கை முடக்க வேண்டுமென கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
தங்க நகையை மீட்க முடியாமலும், கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், தன்னுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ள தன்னுடைய ஊதிய பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முடியாமலும் கடுமையான நெருக்கடிக்கு கூலித் தொழிலாளி லட்சுமணன் உள்ளாக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அவா் புகாா் அளித்துள்ளாா். மேலும் கடந்த இரண்டு நாள்களாக பணிக்கும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாா். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், தன்னுடைய ஆதாா் மற்றும் பான் எண்களை முறைகேடாக பயன்படுத்தி தொழில் நிறுவனம் தொடங்கி வரி ஏய்ப்பு செய்துள்ள நபா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்பூா், வாணியம்பாடி பகுதிகளில் தொடா்ந்து கூலித் தொழிலாளா்களை குறிவைத்து இதுபோன்று தனிப்பட்ட நபா்களின் ஆவணங்களை திருடி முறைகேடாக தொழில் நிறுவனம் தொடங்கி, வரி ஏய்ப்பில் ஈடுபடும் நபா்கள் மீது காவல்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.