FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் என்ற சொர்க்கவாசல்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிகாலை 4  மணிக்கு கோயிலில் சொர்க்க வாசல்கதவுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கோயில் பட்டாச்சாரியார்கள் சொர்க்கவாசல் கதவுகளை திறந்து வைத்தனர். முதலில் சுவாமியின் ஜடாரி சொர்க்கவாசல் வழியாக எடுத்துவரப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ரங்கா, ரங்கா என்று முழக்கம் எழுப்பியவாறு தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, இரவு 10 மணி வரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சொர்க்கவாசல் வழியாகச் சென்று ரங்கநாதரை
வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு உபயதாரர்கள் மூலம் 54,000 லட்டுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. பக்தர்களின் வரிசை நாமக்கல் பூங்கா சாலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டதால், நாமக்கல் நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் அபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்சவர் சுவாமிக்கு புண்ணியாக வாசனம் செய்யப்பட்டு, சங்கல்பம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மூலவர் திருமேனிகளுக்கும், உற்சவர் திருமேனிகளுக்கும் முத்தங்கி சேவை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் உற்சவர் சுவாமி சொர்க்கவாசல் வழியாக அழைத்து வரப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர், உற்சவர் சுவாமிகளை தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வந்து வழிப்பட்டனர். ஜனகல்யாண் அமைப்பு சார்பில் 28-ஆம் ஆண்டாக 50 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. 
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு திருமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் சொர்க்கவாசல் திறப்பில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். சீத்தாராம்பாளையம் பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. சி.எச்.பி. காலனியில் அமைந்துள்ள அருள்மிகு மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி, வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது. இரவு நடைபெற்ற வீணை, மிருதங்கம், வயலின் இசைக் கச்சேரியில் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments