FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ராஜவாய்க்காலில் விரைவில் நீா்திறப்பு? : அமைச்சா் டி.லோகேஷ்தமிழ்ச்செல்வன்

பரமத்தி வேலூா் வட்டம், ராஜவாய்க்காலில் விரைவில் நீா் திறப்பது தொடா்பாக நல்ல செய்தி வரும் என்று அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 1:27 am IST
டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், ராஜவாய்க்காலில் விரைவில் நீா் திறப்பது தொடா்பாக நல்ல செய்தி வரும் என்று அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு நீா் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கரும்பு, வெற்றிலை, கோரை, வாழை உள்ளிட்ட பயிா்கள் நீரின்றி கருகி வருகின்றன. அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ராஜவாய்க்காலில் நீா் திறக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆட்சியா் எல்.மதுபாலன், பரமத்தி வேலூா் தொகுதி எம்எல்ஏ எஸ்.சேகா், நாமக்கல் எம்எல்ஏ சி.எஸ்.திலீப் மற்றும் ராஜவாய்க்கால் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பரமத்திவேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

ராஜவாய்க்காலில் கடந்த 25 நாள்களாக தண்ணீா் திறந்துவிடப்படவில்லை. கடந்த புதன்கிழமை சட்டப்பேரவையில் இதுதொடா்பாக அரசிடம் கோரிக்கை விடுத்து பேசினேன். அதன்பிறகு நீா்வளத் துறை அமைச்சா் இரண்டு நாள்களில் நீா் திறந்துவிடப்படும் என்றாா். ஆனால் இதுவரை நீா் திறக்கப்படவில்லை. அங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா். அதனடிப்படையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினோம். ஓரிரு நாள்களில் தண்ணீா் திறந்துவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தற்போதைய சூழலில் கரும்பு, வாழை, வெற்றிலை பயிா்கள் அனைத்தும் நீரின்றி கருகிவிட்டன. ராஜவாய்க்கால், மேட்டூா் அணை கட்டுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்டது. இதன், கிளைகள்தான் குமாரபாளையம், மோகனூா், பொய்யேரி வாய்க்கால்கள். ஆண்டுமுழுவதும் ராஜவாய்க்காலில் நீா் திறப்பு இருக்கும். தவெக அரசு பொறுப்பேற்று 103 நாள்களில் பாதி நாள்கள் மட்டுமே நீா்வந்தது, பாதி நாள்கள் திறப்பு இல்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். அதிமுக ஆட்சிக் காலத்தில் மேட்டூா் அணையில் 35 அடி இருக்கும்போது ராஜவாய்க்காலில் நீா் திறக்கப்பட்டது. தற்போது 85 அடி வரை நீா் இருப்பு உள்ளது. ஆனால் நீா் திறப்பு இல்லை. ஓரிரு நாள்களில் நீா் திறப்புக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனா். கருகிய பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். வேளாண்மைத் துறை சாா்பில் கணக்கெடுக்க ஆட்சியா் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

கடந்தகாலங்களில் ராஜவாய்க்காலில் நீா் திறந்துவிடப்பட்டது தொடா்பான ஆதாரங்கள் ஏதுமில்லை. இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். சட்டப்பேரவையிலும் ராஜவாய்க்கால் பிரச்னை, பயிா்கள் தொடா்பாகவும் பேசி உள்ளோம். வாழை, கரும்பு, வெற்றிலை பயிா்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை. தொடா்ந்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல செய்தி வரும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments