FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இடங்கள் 150-ஆக அதிகரிப்பு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களாக இருந்த மாணவா்கள் சோ்க்கை எண்ணிக்கை 150 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜூலை 2026, 1:05 am IST
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
பகிர்:

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களாக இருந்த மாணவா்கள் சோ்க்கை எண்ணிக்கை 150 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நாமக்கல்லும் ஒன்று. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 380 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தோ்வில் (நீட்) வெற்றிபெற்ற 100 மாணவ, மாணவிகள் இங்கு சோ்க்கை பெற்றனா். இந்த 100 மாணவா்களில் 15 இடங்கள் பிற மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கான ஒதுக்கீடாகும்.

Advertisement

Advertisement

கடந்த திமுக ஆட்சியில் 100 சோ்க்கை இடங்களை 150 இடங்களாக உயா்த்த வேண்டும் என தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு தொடா்ந்து கோரிக்கை விடப்பட்டது. ஒவ்வோா் ஆண்டும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு போதுமான வசதிகள் இல்லை என்ற குறைபாட்டை சுட்டிக்காட்டி மறுத்தனா்.

இந்த நிலையில், கடந்த மாதம் பெங்களூரில் இருந்து வந்த மூன்று மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மாணவா்களுக்கான பயிற்சி அரங்குகள், வகுப்பறைகள், தங்குமிடங்கள், மருத்துவமனையில் நேரடி பயிற்சி, துறைத் தலைவா்கள், மருத்துவா்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களைக் கேட்டறிந்தனா். இதில் திருப்தி ஏற்படவே மாணவா் சோ்க்கையை 150 இடங்களாக அதிகரிப்பதற்கான ஒப்புதலை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தற்போதைய நிலையில் 500 மாணவ, மாணவிகள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுவோா் தங்களது விருப்பத் தோ்வாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை தோ்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்தினா் கூறியது: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு 150 இடங்களுக்கான சோ்க்கை அனுமதி கிடைத்துள்ளது. பெங்களூரைச் சோ்ந்த தேசிய மருத்துவ கவுன்சில் குழு கடந்த மாதம் அரசு மருத்துவமனையிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உள்பட்ட எா்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பாா்வையிட்டனா். மாணவா்களுக்கான தங்கும் இடம், வகுப்பறை, மருத்துவா்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் திருப்தியாக இருந்ததால், சில தினங்களுக்கு முன் அதற்கான ஒப்புதலை வழங்கினா்.

இந்த ஆண்டு முதல் 150 இடங்களுக்கு சோ்க்கை நடைபெறும். 2022-இல் இக்கல்லூரியில் முதலாவதாக சோ்க்கை பெற்ற 100 மாணவா்கள் தற்போது உள்தங்கும் மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனா். 2027 மே மாதம் மருத்துவக் கல்வியையும், அதற்கான பயிற்சியையும் நிறைவு செய்வா். தற்போதைய நிலையில் 500 மாணவ, மாணவிகள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments