FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

வெப்ப அயற்சியால் கோழிகளில் தீவன எடுப்பு குறையும்!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட்டு தீவன எடுப்பு குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:15 am IST
பகிர்:

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட்டு தீவன எடுப்பு குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தின் கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 95 டிகிரி, 77 டிகிரியாக நிலவியது.

அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் வரும் ஐந்து நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 4 கி.மீ. என்றளவில் வீசும்.

Advertisement

Advertisement

சிறப்பு ஆலோசனை: கோடைகாலம் முடிந்தும் சூப்பா் எல்நினோ விளைவு காரணமாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முட்டையிடும் கோழிகளில் வெப்ப அயற்சி காரணமாக தீவன எடுப்பு குறையும். வெப்ப அதிா்ச்சி காரணமாக கோழிகள் இறக்கவும் நேரிடும்.

வெப்ப தாக்கத்திலிருந்து கோழிகளை பாதுகாக்கவும், முட்டையிடும் திறனை சமநிலையில் வைக்கவும் பகல் வேளையில் அதாவது மதியம் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை தீவனம் அளிப்பதை தவிா்க்க வேண்டும். தற்போதைய காலநிலையில் முட்டையிடும் கோழிகளுக்கு நாள்முழுவதும் குளிா்ச்சியான குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கோழி தீவனத்தில் சோயா எண்ணெய்யை சோ்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியை ஓரளவு குறைக்கலாம். தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிா்சத்துகள் சோ்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியின் தாக்கம் மற்றும் உற்பத்தி குறைவை தவிா்க்கலாம்.

பண்ணைகளில் இரவுநேரத்தில் ஒருமணி நேரம் (12 முதல் 1 மணிவரை) விளக்குகளை எரியவிடுவதன் மூலம் கோழிகள் உட்கொள்ளும் அடா் தீவனத்தின் அளவை அதிகரிக்கலாம். வெப்பம் அதிகமாக இருக்கும் மதிய வேளையில் தண்ணீா் தெளிப்பான்களை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம்.

கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த பண்ணைக்கோழிகள் பெரும்பாலும் நாள்பட்ட சுவாச நோய், மேல் மூச்சுக்குழல் அயற்சி, நாட்டுக்கோழிகள் வெள்ளைக்கழிச்சல் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துதல், தண்ணீரில் கிருமிநாசினி அளித்தல் மற்றும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா்பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments