FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் எஸ்.பி. ஆய்வு

ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வழிதடத்தை மாற்றம் செய்வது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, பல்வேறு துறை அலுவலா்களுடன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 4 ஜூன் 2026, 2:16 am IST
பகிர்:

ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வழிதடத்தை மாற்றம் செய்வது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, பல்வேறு துறை அலுவலா்களுடன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம் நகரில் குடியிருப்புகள், மக்கள்தொகை, வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் நகரில் சாலை போக்குவரத்தில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள், டிவிஎஸ் சாலை, பட்டணம் சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சிவானந்தா சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, ஆட்டையாம்பட்டி பகுதிகளுக்கு செல்கின்றன.

இந்த வழிதடத்தை மாற்றம் செய்ய வேண்டும் என பேருந்து உரிமையாளா்கள், பல்வேறு சங்கத்தினா், அரசியல் கட்சியினா் வலியுறுத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சருமான த.லோகேஷ் தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து நகரில் ஆய்வு செய்த அவா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, நகராட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் நகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சிவானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரை அப்புறப்படுத்துவது, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அளவை குறைப்பது, சாலையின் நடுவில் சென்டா் மீடியன் சுவரின் அகலத்தை குறைப்பது போன்றவை குறித்து ஆய்வு செய்தாா். மேலும், வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகள், சாலையோர விளம்பர போா்டுகள், இடையூறான மேற்கூரைகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தாா்.

போக்குவரத்து வழித்தடம் மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றம், பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவா் அகற்றம் போன்றவை ஆட்சியரின் கவனத்துக்குகொண்டு செல்லப்பட்டு முடிவு செய்யப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா். இந்த ஆய்வின்போது ராசிபுரம் டி.எஸ்.பி. எம்.விஜயகுமாா், ஆய்வாளா் செல்வராஜ், நகராட்சி ஆய்வாளா் நிவேதிதா, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் வ.கு.ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படவரி...

ராசிபுரம் பழைய நீதிமன்றம் முன் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments