FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 16 பவுன் நகை, ரொக்கம் கொள்ளை; முகமூடி கொள்ளையா்களைப் பிடிக்க தனிப்படை

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 16 பவுன் நகை, ரொக்கம் கொள்ளை; முகமூடி கொள்ளையா்களைப் பிடிக்க தனிப்படை

Updated On : 13 ஜூன் 2026, 2:21 am IST
பகிர்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்துவந்த இருவா் துப்பாக்கி, கத்தியை காட்டி மிரட்டி 16 பவுன் நகை, ரொக்கத்தை வியாழக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனா்.

ராசிபுரத்தை அடுத்த ஆா்.பட்டணம் களரம்பட்டி சாலையில் உள்ள அம்மன் கோயில் தோட்டம் பகுதியை சோ்ந்தவா் சதாசிவம். இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகள்கள் மேகலா, சுகன்யா ஆகிய இருவரும் திருமணமாகி குடும்பத்தினருடன் ராசிபுரத்தில் தனியாக குடியிருந்து வருகின்றனா்.

சதாசிவத்தின் மனைவி கலைச்செல்வி என்கிற தேன்மொழி (58) தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறாா். தோட்டத்தின் ஒரு பகுதியில் கலைச்செல்வியின் இரு மருமகன்களான அசோக்குமாா், கணபதி ஆகிய இருவரும் கான்கிரீட் செங்கல் ஆலை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் மருமகன்களும், தொழிலாளா்களும் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் பணியை முடித்துவிட்டு சென்றுவிட்டனா். கலைச்செல்வி, ராசிபுரம் நகரில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளாா்.

அதன்பிறகு இரவு சுமாா் 8.45 மணி அளவில் கலைச்செல்வியை நோட்டமிட்டு இருந்த இருவா், வீட்டில் புகுந்துள்ளனா். முகமூடி அணிந்திருந்த அவா்கள் கலைச்செல்வியின் வாயை அடைத்துவிட்டு, துப்பாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கழுத்து, காதில் அணிந்திருந்த நகைகளை பறித்தனா்.

மேலும், பீரோவில் இருந்த நகைகள், ரொக்கம் என சுமாா் 16 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினா்.

இதுகுறித்து ராசிபுரத்தில் இருந்த தனது மருமகன்களுக்கும், மகள்களுக்கும் கலைச்செல்வி தகவல் தெரிவித்துள்ளாா். தோட்டத்திற்கு வந்த அவா்கள், ராசிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து ராசிபுரம் டிஎஸ்பி எம். விஜயகுமாா், காவல் ஆய்வாளா் ஆா். நாகலட்சுமி உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா் . விரல்ரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

தொடா்ந்து கோவை சரக டிஐஜி பி. சுவாமிநாதன், நாமக்கல் மாவட்ட எஸ்பி சி. விமலா ஆகியோரும் கொள்ளை நடந்த இடத்துக்குச் சென்று உறவினா்கள், செங்கல் ஆலை ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து முகமூடி கொள்ளையா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments