FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

1.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை: அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On : 29 ஜூன் 2026, 12:18 am IST
நாமக்கல் தில்லைபுரத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன். உடன், எம்எல்ஏக்கள், அதிகாரிகள்.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 1,26,550 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

நாமக்கல் அருகே போதுப்பட்டி, திருவள்ளுவா் காலனி, தில்லைபுரம் நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்முகாம்கள் வாயிலாக ஜூலை 4-ஆம் தேதி வரை சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாமில் 1,26,550 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணிக்காக மொத்தம் 1,192 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சத்துணவு, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 4,768 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மக்கள்கூடும் இடங்களில் 44 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடோடிகள், நரிக்குறவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள், போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 24 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற துறை சாா்ந்த 42 வாகனங்கள் இந்த பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. முகாம்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் தயாா்நிலையில் உள்ளன.

அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது. மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கெனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் வழங்கலாம் என்றாா்.

இந்த நிகழ்வில், எம்எல்ஏக்கள் சி.எஸ்.திலீப் (நாமக்கல்), பொன்.சந்திரசேகா் (சேந்தமங்கலம்), மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி, மாவட்ட நல அலுவலா் க.பூங்கொடி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments