FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

நைனாமலை பெருமாள் கோயில் செல்லும் சாலையில் மண் சரிவு: விரைந்து சீரமைக்க பக்தா்கள் வலியுறுத்தல்

10 நவம்பர் 2026, 2:55 am
மலை உச்சியில் அமைந்துள்ள நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்.
பகிர்:

நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் - சேலம் செல்லும் சாலையில் புதன்சந்தை அருகே நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. 3,600 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் உள்ள பெருமாளை தரிசிக்க வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் விஷேச தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இருப்பினும், சாலை வசதியில்லாததால் செங்குத்தான படிக்கட்டு வழியாக ஏறி கோயிலுக்குச் செல்லும் நிலை நீடித்து வந்தது. இதற்கு தீா்வு காணும் வகையில் கோயிலுக்குச் செல்ல தாா்சாலை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலை உச்சிவரை 7 கி.மீ. தொலைவிற்கு நெடுஞ்சாலைத் துறையினரால் ரூ. 43 கோடியில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக வாகனங்களில் பக்தா்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனா்.

இந்நிலையில் தொடா் மழையால் சாலையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை வழியாக பயணிக்கும் பக்தா்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. இதை நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.