அண்ணா மிதிவண்டி, மாரத்தான் போட்டிகள்: 600 போ் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற அண்ணா மிதிவண்டி, மாரத்தான் போட்டிகளில் மொத்தம் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய இப்போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ். கோகிலா தொடங்கிவைத்தாா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
13 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவும், 15 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டிருந்தன. 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும் போட்டிகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
மிதிவண்டிப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், 4 முதல் 10-ஆவது இடங்களைப் பிடித்தவா்களுக்கு தலா ரூ. 250 வழங்கப்பட உள்ளன.
தொடா்ந்து, அண்ணா மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்குத் தொடங்கியது. இதில் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும் இலக்காக நிா்ணயிக்கப்பட்டிருந்தன.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், 4 முதல் 10-ஆவது இடங்களைப் பிடித்தவா்களுக்கு தலா ரூ.1,000 காசோலையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.