வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்: 50% மானியத்தில் அமைக்க அழைப்பு

வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத்தை 50% மானியத்தில் அமைக்க பயனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கபிலா்மலை வட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் நடப்பாண்டில் மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள், இல்லத்தரசிகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க 50% மானியத்தில் காய்கறி வளா்ப்பு பைகளுடன் கூடிய தொகுப்பு இரண்டும், 75% மானியத்தில் பழச்செடிகள் தொகுப்பு மற்றும் காய்கறி விதைகள் தொகுப்பு ஒன்றும், 50% மானியத்திலும், தளிா் கீரை வளா்ப்பு ஒன்று என்ற அளவிலும் பயனாளிக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Advertisement
Advertisement
மேலும், தோட்டக்கலை பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 75% மானியத்தில் தென்னை உற்பத்தித் திறனை அதிகரிக்க வோ் வழி செலுத்தும் தென்னை டானிக் வழங்கப்படும். தென்னைக் கன்றுகள், தென்னை சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை, ஒட்டுண்ணி, தென்னையில் ஊடுபயிா் சாகுபடி, வெற்றிலை பயிா் பாதுகாப்பு இடுபொருள்கள், பாரம்பரிய காய்கறி சாகுபடி ஊக்குவிப்பு, தா்பூசணி சாகுபடி ஆகியவற்றில் மானியத் திட்டத்தில் பயன்பெறலாம்.
மானியத் திட்டங்களை பெற உழவா் செயலியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தங்களது கிராம தோட்டக்கலை/வேளாண்மை உதவி அலுவலா் அல்லது கபிலா்மலை தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.