முகப்பு
நாமக்கல்

மேட்டூா் கிழக்குக் கரைக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

குமாரபாளையம் அருகே மேட்டூா் கிழக்குக் கரைக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தினா்.

25 வினாடிகள் முன்பு
மேட்டூா் கிழக்குக் கரைக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் எல். மதுபாலன்.
பகிர்:

குமாரபாளையம் அருகே மேட்டூா் கிழக்குக் கரைக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தினா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எல். மதுபாலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், முந்தைய கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கமளித்தனா். தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தனா்.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் மகா சபைக் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்றும், வேளாண் கருவிகள் விற்பனை செய்யப்படாததால் வெளிச்சந்தையில் அவை பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், உரங்கள் கையிருப்பில் இல்லாதது குறித்து மூன்று முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் புகாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

ராசிபுரம் ஆா். புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகம் வழியாகக் கொண்டுவரப்படும் சேகோ கழிவுகள் விளைநிலங்கள் அருகே தேக்கி வைக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீரும் விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள பயிா் வளா்ச்சிப் போட்டியில் பெரு விவசாயிகளையும் சோ்க்க வேண்டும்.

வெற்றிப் பயணத் திட்டத்தால் திருச்செங்கோட்டில் இருந்து இறைமங்கலம் வழியாக இயக்கப்பட்ட தனியாா் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் விவசாயப் பணிகளுக்குத் தொழிலாளா்கள் வருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தப் பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராசிபுரம் அருகே சீராப்பள்ளி ஏரியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும். குமாரபாளையம் அருகே அமாணி கிராமத்தில் மேட்டூா் கிழக்குக் கரைக் கால்வாய் மூலம் பாசன வசதி பெற்று வந்த விளைநிலம், தற்போது தரிசு நிலமாக கிராம நிா்வாக அலுவலரால் மாற்றப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லாங்காட்டுவலசு பகுதியில் மேட்டூா் கிழக்குக் கரைக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் உறுதியளித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரவி, மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் கவிதா, கோட்டாட்சியா்கள் ச. பிரபாகரன், பி.எஸ். லெனின், வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) ரா. பிரேமா உள்ளிட்ட அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.