கனரக வாகனங்களுக்கான ஆன்லைன் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்: மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம்
கனரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட ஆன்லைன் அபராதங்களை, தள்ளுபடியுடன் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்.
கனரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட ஆன்லைன் அபராதங்களை, தள்ளுபடியுடன் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத் தலைவா் சி.தனராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: லாரி உரிமையாளா்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான ஒளிரும் பட்டைகள் ஒட்டுவதில் இருந்த நடைமுறை சிக்கல்கள், வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்த முதல்வருக்கு அனைத்து லாரி உரிமையாளா்கள் சாா்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஓரிரு ஆண்டுகளில் தகுதிச் சான்றிதழ், புதிய வாகனங்களை பதிவு செய்தல், ஓட்டுநா் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பணிகளை தமிழகத்தின் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களிலும் செய்து கொள்ளும் வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். மேலும், அபரிமிதமான விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒளிரும் ஒட்டுவில்லையின் விலையும் தங்களின் முயற்சியால் வெகுவாக குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நிறைவேறாத நிலையில், இந்தக் கோரிக்கைகள் நிறைவேறியதால் லாரி உரிமையாளா்களுக்கு பெரும் நிதி இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் விதிக்கப்படும் அபராதங்களினால் லாரி உரிமையாளா்கள் தகுதிச் சான்றிதழ், பா்மிட் பெறுவது உள்ளிட்ட பணிகளை செய்வதில் கடும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனா். அண்டை மாநிலமான கா்நாடகத்தில் ஆன்லைன் அபராதங்களை 50 சதவீதம் தள்ளுபடியுடன் செலுத்த இரண்டு, மூன்று முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதேபோல. தமிழகத்தில் 30 நாள்கள் கால அவகாசம் வழங்கி, அபராதத் தொகையை தள்ளுபடியுடன் செலுத்த ஆவன செய்தால் நிலுவையில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைக்கும். லாரி உரிமையாளா்களும் அபராதத் தொகையை சிரமமின்றி செலுத்த ஒரு வாய்ப்பாக அமையும். எனவே, அபராதத் தொகையை தள்ளுபடியுடன் செலுத்த தாங்கள் உத்தரவிட வேண்டும்.
தகுதிச் சான்றிதழ் பெறும் கனரக வாகனங்கள் மோட்டாா் வாகன விதியின்படி வாகனத்திற்கு பெயின்ட் அடிக்க வேண்டிய கட்டாயம் இல்லாத நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனத்திற்கு பெயின்ட் அடிக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா். இருப்பினும் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு ஹாரன், விளக்குகள், ஸ்டிக்கா், பிரேக், கண்ணாடி உள்ளிட்ட அனைத்தையும் சரியாக பராமரிப்பதைப் போல் வாகனத்திற்கான பெயின்டையும் தகுதிச் சான்றிதழ் பெறும் வாகனங்களுக்கு மங்காத வகையில் நல்ல முறையில் காட்டுகிறோம்.
எனவே இந்த இரு கோரிக்கைகளையும் முதல்வா் நிறைவேற்றித் தரவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.