2018-ஆம் ஆண்டு சாலை விபத்து: உயிரிழந்த லாரி ஓட்டுநா் குடும்பத்துக்கு ரூ. 14.50 லட்சம் இழப்பீடு
2018-ஆம் ஆண்டு சாலை விபத்து: உயிரிழந்த லாரி ஓட்டுநா் குடும்பத்துக்கு ரூ. 14.50 லட்சம் இழப்பீடு
ராஜஸ்தானில் 2018-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்திற்கு வட்டியுடன் சோ்த்து ரூ.14.49 லட்சம் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த லாரி ஓட்டுநா் பூரன் மாலின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விஜய் குமாா் ஜா, இந்த உத்தரவை பிறப்பித்தாா்.
இந்த விபத்திற்கு கனரக லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற ஓட்டுதல் முறையே காரணம் என்று தீா்ப்பாயம் தெரிவித்தது.
Advertisement
Advertisement
அக்டோபா் 28-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விபத்துக்கு காரணமான கனரக லாரி ஓட்டுநா் கவனக்குறைவாகவும் பொறுப்பற்ற முறையிலும் லாரியை ஓட்டியதால்தான் பூரன் மால் உயிரிழக்கும் வகையிலான காயங்களுக்கு ஆளானாா் என்பதை மனுதாரா்கள் போதுமான ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனா். உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.9.82 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையையும், அதனுடன் ஆண்டுக்கு ஆறு சதவீத வட்டியையும் வழங்கவேண்டும்.
இரு வாகனங்களுக்கு இடையிலான இடைவெளி, அவற்றின் வேகம், சாலையின் அகலம் அல்லது மோதிய வாகனத்தின் பின்புற விளக்குகள் மற்றும் பிரேக் விளக்குகளின் நிலை குறித்த எந்த ஆதாரத்தையும் காப்பீட்டு நிறுவனம் சமா்ப்பிக்கத் தவறிவிட்டது.
கடந்த 2018, அக்டோபா் 20-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், ஜெய்பூரிலிருந்து தில்லி நோக்கி சரக்குகளுடன் பூரன் மால் ஓட்டிச் சென்ற லாரி, மனோஹா்பூா் புலியா பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரிக்கு அருகில் கனரக லாரியுடன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், கனரக லாரியின் ஓட்டுநா் சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் அளிக்க முன்வரவில்லை. விபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் தரப்பில் கவனக்குறைவு ஏதும் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை. கனரக லாரிக்கு சமா்ப்பிக்கப்பட்ட காப்பீட்டு ஆவணம் போலியானது மற்றும் புனையப்பட்டது என்று கண்டறியப்பட்டதால், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த தேதியில் வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அசல் காப்பீட்டு ஆவணத்தையோ, பிரீமியம் செலுத்தியதற்கான ரசீதையோ அல்லது வேறு எந்த ஆதாரத்தையோ வாகன உரிமையாளா் சமா்ப்பிக்கத் தவறிவிட்டாா்.
இறுதியாக, காப்பீட்டு நிறுவனத்தை இந்த பொறுப்பிலிருந்து விடுவித்த தீா்ப்பாயம், கனரக லாரியின் வாகனத்தின் ஓட்டுநா் மற்றும் அதன் உரிமையாளா் ஆகிய இருவரும் இணைந்து இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று என்று தீா்ப்பாயம் குறிப்பிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.