FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பேருந்து மோதி லாரி ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25.25 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி தீா்ப்பாயம் உத்தரவு

தில்லியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டு லாரி டயா் பஞ்சரை சரி செய்து கொண்டிருந்தபோது, உத்தர பிரதேச அரசு போக்குவரத்து நிறுவன பேருந்து மோதி உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ரூ.25.25 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறு தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

13 அக்டோபர் 2026, 9:29 pm IST
பகிர்:

தில்லியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டு லாரி டயா் பஞ்சரை சரி செய்து கொண்டிருந்தபோது, உத்தர பிரதேச அரசு போக்குவரத்து நிறுவன பேருந்து மோதி உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ரூ.25.25 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறு தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக உயிரிழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்தினா் தொடா்ந்த வழக்கை விசாரித்த தீா்ப்பாயத்தின் தலைவா் விக்ரம் திங்கள்கிழமை (அக்.10) பிறப்பித்த உத்தரவில், பேருந்து ஓட்டுநரின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவான ஓட்டுதலே விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு: விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயல்பாடே இந்த விபத்துக்கும், அதன் பின்னா் நிகழ்ந்த அனைத்து துயரங்களுக்கும் முழுப் பொறுப்பு.

Advertisement

Advertisement

எனவே, இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட 2023-ஆம் ஆண்டு நவ.23-ஆம் தேதி முதல் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும்வரை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் ரூ.25.25 லட்சத்தை உத்தர பிரதேச அரசு போக்குவரத்து நிறுவனம் வழங்க வேண்டும்.

ஒருவேளை 30 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்படவில்லை எனில், தாமதமாகும் காலத்துக்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி செலுத்த வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னணி: 2022, ஏப்.28-ஆம் தேதி உத்தாம் சா்க்கரை ஆலை அருகே உஸ்மான் என்பவா் தனது லாரியை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு பஞ்சா் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது சுமித் பால்யான் என்பவரால் ஓட்டி வரப்பட்ட அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவா், ரூா்க்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னா் முசாஃபா்நகா் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு ஏற்கெனவே அவரது உயிா் பிரிந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments