FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நெல்லை அருகே அரசுப் பேருந்து – டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்: நடத்துனர் பலி; 20 பேர் காயம்!

நெல்லை அருகே அரசுப் பேருந்து – டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து...

8 அக்டோபர் 2026, 2:03 pm IST
அரசுப் பேருந்து – டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல் - X
பகிர்:

நெல்லை பிரான்ச்சேரி அருகே அரசுப் பேருந்து – டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் நடத்துனர் பலியானார். பெண்கள், குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பிரான்ச்சேரி அருகே கொழுமடை பகுதியில், திருநெல்வேலி – அம்பாசமுத்திரம் சாலையில் அரசுப் பேருந்தும், மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் உயிரிழந்தார்.

மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 10 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் நோக்கி 80-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. பிரான்ச்சேரி அருகே கொழுமடை பகுதியில் சென்றபோது, எதிரே மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி வந்துள்ளது.

அப்போது இரு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் டிப்பர் லாரியின் முன்பகுதிகள் பலத்த சேதமடைந்தன.

விபத்து ஏற்பட்ட உடனேயே பேருந்துக்குள் இருந்த பயணிகள் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் அச்சத்தில் கதறி அழுதனர். பலர் காயங்களுடன் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டதால் சம்பவ இடமே பெரும் பதற்றமாக மாறியது.

பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் சேரன்மகாதேவி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும், சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளர் ஆண்டோ ஆர்கே ஆரோக்கியராஜ் தலைமையில் சம்பவ இடத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து காயமடைந்த அனைவரையும் மீட்டு, 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடத்துனர் அஜித் மெல்வின் ஆர்தர் உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் அரசு பேருந்தின் நடத்துனர் அஜித் மெல்வின் ஆர்தர் (52) உயிரிழந்தார். அவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தில், வள்ளியூர் கிளையில் பணியில் உள்ளார். விபத்தில் சிக்கி நடத்துனர் உயிரிழந்த சம்பவம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து ஓட்டுநரும் படுகாயம்

விபத்தில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த அருண் (57), மாடன்பிள்ளை தர்மம், பழவூர், பணகுடி அருகே என்பவரும் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிப்பர் லாரி ஓட்டுநரும் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 பேர் கவலைக்கிடம் – ஆட்சியர் தகவல்

விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், மீதமுள்ள 8 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.

போக்குவரத்து குறித்து ஆட்சியர் விளக்கம்

அரசு மருத்துவமனை வாசலில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் அரசுப் பேருந்துகளில் ஒரு பக்க கதவு திறக்கப்படாமல் இருப்பதால் பயணிகள் முண்டியடித்து ஏறும் நிலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர் ஆனந்த் மோகன், வெற்றி பயணத் திட்டம் அனைவருக்கும் பொதுவானது; அதனை யாரும் தடுக்க முடியாது என்றும், இதுகுறித்து ஏற்கனவே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிப்பர் லாரியின் வேகம், பேருந்தின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரான்ச்சேரி அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் நடத்துனர் உயிரிழந்து, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 பேர் கவலைக்கிடமாக இருப்பது நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

Collision between govt bus and tipper lorry near Nellai: Conductor killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments