அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம்
அசாமில் மினி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து பற்றி.....
அசாமில் மினி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 23 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், காசிரங்கா தேசியப் பூங்கா அருகே வெள்ளிக்கிழமை மினி பேருந்தும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 23 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்களில் இருவர் பெண்கள் ஆவர்.
Advertisement
Advertisement
பலியானவர்களில் இரு பெண்கள் மட்டுமின்றி, பலர் வகுப்புகளை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலையில் ரங்கஜன் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மூத்த அதிகாரி கூறினார்.
மினி பேருந்து கோலாகாட்டிலிருந்து நாகானை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகவும், கன்டெய்னர் லாரி மேல் அசாம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்தில் சரியாக எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மிக அதிக வேகத்தில் சென்ற மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.