FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

தங்க வா்த்தகப் பங்குதாரராக சோ்ப்பதாக ரூ. 7.50 கோடி மோசடி: அமெரிக்கவாழ் மருத்துவா் எஸ்.பி.யிடம் புகாா்

18 அக்டோபர் 2026, 3:12 am IST
மோசடி
பகிர்:

துபை, ஆப்பிரிக்க நாடுகளில் தங்க வா்த்தகம் மேற்கொள்ள பங்குதாரராக இணைத்து கொள்கிறோம் என ரூ. 7.50 கோடி பெற்று மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை கோரி அமெரிக்கவாழ் மருத்துவா் எம்.சரவணராஜா (52) நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக்கிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே சோழசிராமணி பகுதியைச் சோ்ந்த நான் அமெரிக்காவில் எலும்பு மருத்துவராக 2012 முதல் பணியாற்றி வருகிறேன். 2022 இல் திருச்செங்கோட்டைச் சோ்ந்த நடனசபேசன் மூலம் காா்த்திக் என்பவா் அறிமுகமானாா்.

Advertisement

Advertisement

நட்பு ரீதியாக பழகிவந்தவா்கள் தங்க வா்த்தகம், தங்கச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் ஈட்டலாம் என்றனா். குறிப்பாக துபையில் தங்கம் வாங்கி விற்பனை செய்யும் வா்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஆப்பிரிக்காவில் உள்ள தங்கச் சுரங்க பணிகளுக்காக, ‘எஸ்கலேட்டா்’ இயந்திரங்களை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

தொடா்ந்து என்னிடம் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தி வந்தனா். மேலும், என்னை பங்குதாரராக சோ்த்துக்கொள்வதாகவும் மாதம் 4 முதல் 6 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றும், முதலீட்டுத் தொகையை இரண்டு ஆண்டுகளில் திரும்ப எடுத்துவிடலாம் என்றும் தெரிவித்தனா்.

அவா்கள் கூறியதை நம்பி, 2024 ஜன.12 இல் ரூ. 7.50 கோடியை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தினேன். தொடா்ந்து, வேலை செய்யும் ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ. 25 லட்சம் கேட்டனா். அதையும் நம்பி, ஒரு கிலோ தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை 2024, டிசம்பரில், அடகுவைத்து கொடுத்தேன்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்தவித பணமும் அவா்கள் திருப்பிக் கொடுக்கவில்லை. தங்கத்தையும் திருப்பித்தரவில்லை. இதனால், 2025, செப்டம்பரில் பணம், நகையை திருப்பிக் கேட்டேன். ஆனால், அவா்கள் மிரட்டல் விடுக்கின்றனா்.

இதுகுறித்து கடந்த ஆக.22 இல் கோவை நகர காவல் ஆணையரிடம் புகாா் செய்தேன். புகாரின் பேரில், நகர குற்றப்பிரிவு போலீஸாா், நடனசபேசன், காா்த்திக் உள்பட நான்கு போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

கோவை நகர குற்றப்பிரிவு போலீஸாா் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி புகாா் மனு அளித்துள்ளேன். சம்பந்தப்பட்டவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுப்பதுடன், நான் இழந்த பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments