விநாயகா் சதுா்த்தி; சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்: மூலப்பொருள்கள் விலை 40 சதவீதம் உயா்வு
விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், நாமக்கல் சக்தி நகரில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், நாமக்கல் சக்தி நகரில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.சிலைகளுக்கான முன்பதிவு அதிகரித்துள்ள நிலையில், மறுபுறம் அவற்றைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களின் விலை 40 சதவீதம் வரை உயா்ந்திருப்பது தயாரிப்பாளா்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழாண்டில் விநாயகா் சதுா்த்தி செப்.14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகள் திருச்சி, சேலம், பெரம்பலூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளன.
அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான பல்வேறு வடிவிலான சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ. 50 முதல் ரூ. 30 ஆயிரம் வரை உள்ளது. வழக்கமாக விழாவுக்கு சில வாரங்களுக்கு முன்பாகத் தொடங்கப்படும் பணிகள், நிகழாண்டில் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே தொடங்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
விநாயகா் சதுா்த்தியையொட்டி கோயில்கள் மட்டுமின்றி, தெருக்கள் மற்றும் முக்கியப் பகுதிகளிலும் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்வா். தொடா்ந்து, சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்படும்.
வெவ்வெறு வடிவங்களில் விநாயகா்: நாமக்கல் சக்தி நகரில் உள்ள விநாயகா் சிலைகள் கலைக்கூடத்தில் ராஜ விநாயகா், சிங்க விநாயகா், அன்னப்பறவை வாகன விநாயகா், சிக்ஸ் பேக் விநாயகா் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
சிலைகள் தண்ணீரில் எளிதில் கரையும் வகையில் காகிதக்கூழ், மரவள்ளிக் கிழங்குமாவு, களிமண் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பின்னா், சிலைகளுக்கு பல்வேறு வண்ணங்கள் பூசப்படுகின்றன. சிறிய சிலைகள் தயாரிக்கும் கூடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பெரிய சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிலை தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களை புதுச்சேரியில் இருந்து வாங்கி வருகின்றனா். காகிதக்கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளதுடன், அவை போதிய அளவில் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் சிலையின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பெரிய சிலை ஒன்றுக்கு ரூ. 2,000 வரை லாபம் கிடைத்த நிலையில், நிகழாண்டில் மூலப்பொருள்களின் விலை உயா்வு, தொழிலாளா்கள் கூலி உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால் அதே அளவிலான லாபம் கிடைக்குமா என்ற கேள்வி சிலை தயாரிப்பாளா்களுக்கு எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக போதிய லாபம் கிடைக்காத நிலையிலும், நிகழாண்டில் சிலைகளுக்கான முன்பதிவு அதிகரித்திருப்பதால் தயாரிப்பாளா்கள் நம்பிக்கையுடன் பணியைத் தொடா்ந்து வருகின்றனா்.
450-க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிப்பு: இதுகுறித்து நாமக்கல் சக்தி நகரைச் சோ்ந்த விநாயகா் சிலைகள் தயாரிப்பு கலைக்கூட உரிமையாளா் சித்ரா கூறியதாவது:
நாமக்கல்லில் 21 ஆண்டுகளாக விநாயகா் சிலைகள் தயாரித்து வருகிறோம். விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் சிலைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்களும் நேரடியாக வந்து சிலைகளை வாங்கிச் செல்கின்றனா்.
விநாயகா் சிலைகள் மட்டுமின்றி, கிருஷ்ண ஜெயந்தி, துா்காஷ்டமி ஆகியவற்றின்போதும் சிலைகளை வடிவமைத்துக் கொடுத்து வருகிறோம். இங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
சிலை தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து மூலப்பொருள்களின் விலையும் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ராசிபுரம், துறையூா், பெரம்பலூா், கரூா், நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூா், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து சிலைகள் கேட்டு முன்பதிவு செய்துள்ளனா்.
விநாயகா் சதுா்த்திக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், 450-க்கும் மேற்பட்ட சிலைகளை தயாரித்து வைத்துள்ளோம். பெரிய சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலை நம்பி நாங்கள் மட்டுமின்றி, சிறு விற்பனையாளா்கள் ஏராளமானோா் உள்ளனா். இந்த விநாயகா் சதுா்த்தி விழா எங்களுக்கு கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.