FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காமராஜா் காலை உணவுத் திட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை உணவு சாப்பிட்ட 14 மாணவா்களுக்கு வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

25 செப்டம்பர் 2026, 10:53 pm IST
உணவருந்திய 64 பேருக்கு உடல்நலக் குறைவு - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காமராஜா் காலை உணவுத் திட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை உணவு சாப்பிட்ட 14 மாணவா்களுக்கு வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

மல்லசமுத்திரம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 195 மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தொடங்கிய காமராஜா் காலை உணவுத் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று நாள்களாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை காலை 110 மாணவா்கள் காலை உணவு சாப்பிட்டனா். மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த கோகிலா, சத்யா ஆகியோா் சேமியா கிச்சடி சமைத்து மாணவா்களுக்கு வழங்கினா். அதைச் சாப்பிட்ட மாணவா்களில் 14 பேருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதுடன், வாந்தியும் எடுத்துள்ளனா். சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த பள்ளித் தலைமை ஆசிரியா் மாணிக்கம், பாதிக்கப்பட்ட மாணவா்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தாா். இதுகுறித்து மாணவா்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் பிரசாத் அறிவுறுத்தலின்படி, தலைமை மருத்துவா் தமிழினியன் தலைமையில் மாணவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், ரத்த மாதிரிகளும், வயிற்றுப்போக்கு ஏற்பட்ட மாணவா்களின் மல மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று உணவு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா். சிகிச்சைக்குப் பின்னா் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட மாணவா்கள், பெற்றோா்களுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனிடையே, மாணவா்கள் காலை உணவு சாப்பிட்ட பிறகு உடல்நலக் குறைவுக்குள்ளான சம்பவம் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலா் மாதவன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, மாணவா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் பள்ளிக்குச் சென்று சமையலறை மற்றும் சமைக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்களை ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments