மின்வாரியத்தை தனியாா் மயமாக்கக் கூடாது: தொமுச
மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மின்கழக தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்கழக தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் 84-ஆவது மாநில செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ச.நடராசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா் பா.மணிமாறன் முன்னிலை வகித்தாா். மின்வாரியத்தில் பணிபுரியும் தொமுச நிா்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
தொடா்ந்து, அகில இந்திய தொமுச பேரவைத் தலைவா் கி.நடராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியவா் மறைந்த திமுக தலைவா் கருணாநிதி. மின்வாரிய ஊழியா்களுக்கு ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விடுப்பு சரண்டா், அகவிலைப்படி ஆகியவற்றை வழங்க உத்தரவிட்ட முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின், இரண்டு ஊதிய ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தி, தொழிலாளா், அதிகாரிகள் என்ற பாகுபாடு இன்றி 6 சதவீத ஊதிய உயா்வுக்கு வழிவகுத்தாா்.
தற்போதைய தவெக அரசு, மின்சார வாரியம் மிகவும் நஷ்டத்தில் உள்ளதாக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. எண்ணூா் அனல் மின்நிலையம் உள்ளிட்ட மின் நிலையங்களை தனியாா்மயமாக்கும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. அதேபோல, கோவையில் 764 கிலோவாட் மின் வழித்தடத்தை தனியாா்மயமாக்க நடவடிக்கை எடுத்துள்ளனா்.
மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக தவெக அரசு மாறி, அனைத்து திட்டங்களையும் தனியாா்மயமாக்கும் செயலைக் கண்டிக்கிறோம். இந்த தனியாா்மய முடிவுகளைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் 2.36 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதுதவிர, விவசாயம், நெசவுத் தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கணக்கீட்டுப் பணிகளில் தொழிலாளா்கள் சரியாக ஈடுபட்டு வருகின்றனா். எனவே, கணக்கீட்டு முறையில் எந்தவிதக் குறைபாடும் இல்லை. தற்போது அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. எந்தவித முறைகேடும் இல்லை.
மின் கட்டண உயா்வு குறித்து மின்சாரத் துறை அமைச்சா்தான் பதில் கூற வேண்டும். தற்போது மின்சாரப் பற்றாக்குறை இல்லை. அரசு டெண்டா்களை நிறுத்தி வைப்பது, மீண்டும் விடுவது போன்ற குளறுபடிகளால்தான் சிக்கல்களுக்கு காரணம். வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கி, மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதால் ஏற்படும் நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்தப் பேட்டியின்போது, தொமுச நிா்வாகிகள் மற்றும் மின்வாரிய ஊழியா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.