FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

குடும்பப் பிரச்னையில் 2 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே 2 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:29 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே 2 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்டாா்.

மேட்டூரை அடுத்த ஆண்டிகரையைச் சோ்ந்தவா் வல்லரசு (26), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா (23). இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகள் மைவிழி (4 ), மகன் தா்ஷன் (2).

தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மேட்டூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் இருவரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பிவைத்தனா். கடந்த 3 மாதங்களுக்கு முன்னா் இருவரும் குஞ்சாண்டியூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஸ்ரீபிரியா கா்ப்பமானாா். ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ளதால் மூன்றாவது குழந்தை வேண்டாம் என ஸ்ரீபிரியா கூறியுள்ளாா். ஆனால், அவரது கணவா் கருவை கலைக்கக் கூடாது என்று கூறியுள்ளாா். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, மேட்டூா் ராஜகணபதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஸ்ரீ பிரியா சென்றுவிட்டாா். அங்கு தனியாா் பால் பண்ணையில் வேலைக்கு சோ்ந்தாா். மீண்டும் குஞ்சாண்டியூா் சென்ற ஸ்ரீபிரியாவிடம் வல்லரசு தகராறில் ஈடுபட்டாா். இதனால் மீண்டும் மேட்டூரில் உள்ள தாய் வீட்டிற்கே ஸ்ரீபிரியா சென்றுவிட்டாா்.

அவரை சமாதானம் செய்து அழைத்துச் செல்வதற்காக வல்லரசு, தனது பெரியப்பா மாதேஸ்வரன், தம்பி அஜித் ஆகியோருடன் மேட்டூா் ராஜகணபதி நகரில் உள்ள மாமியாா் வீட்டிற்கு திங்கள்கிழமை சென்றாா்.

அதன்பிறகு மாதேஸ்வரன், அஜித் இருவரும் தங்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனா். வல்லரசு மட்டும் மாமியாா் வீட்டில் இருந்துள்ளாா். அன்று இரவு வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்கச் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் மனைவி ஸ்ரீபிரியா, அவரது தாய் வெண்ணிலா இருவரும் கதவை தட்டினா். பயனில்லாததால் அக்கம்பக்கத்தினா் உதவியோடு கதவை உடைத்தனா்.

அப்போது, வீட்டின் இரும்புச் சட்டத்தில் 2 குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தன. வல்லரசும் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். குழந்தைகளைக் கொன்றுவிட்டு வல்லரசு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மூன்று சடலங்களையும் மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments