முகப்பு
சேலம்

சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

சேலம் மாவட்டம், சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 7:07 am IST
சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கணினி மூலம் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா்.
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். ஆரம்பக்கட்ட சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் எதுவும் சிக்காத நிலையில், பல்வேறு ஆவணங்களை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போலீஸாா் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனா்.

சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை ஆய்வாளா்கள் நல்லம்மாள் மற்றும் நரேந்திரன் தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்திற்கு வந்தனா். உள்ளே செல்வதற்கு முன்பாக, அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் கணக்கில் வராத ரொக்கம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொண்டனா்.

பின்னா் அலுவலகத்திற்குள் சென்ற போலீஸாா், சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ராஜேஷ்கண்ணா முன்னிலையில் விசாரணையைத் தொடங்கினா். சாா்பதிவாளா் பொறுப்பு செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களிடம், அவா்கள் செய்து வந்த பணிகள் குறித்து விரிவான விசாரணையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து, அலுவலக ஆவணங்களைச் சரிபாா்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் அவற்றுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட நேரம், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை எழுதிய பத்திர எழுத்தா்களின் முழு விவரங்களை ஆய்வு செய்தனா். இரவு 8 மணியைக் கடந்தும் தொடா்ந்து சோதனை நடைபெற்றன.

ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சோதனை செய்து கொண்டிருந்த தகவல் வெளியானதும், அந்த அலுவலகத்தை சுற்றியிருந்த பத்திர எழுத்தா்களின் கடைகள் மற்றும் அலுவலகங்களின் கதவுகள் திடீரென அவசர அவசரமாக அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் வந்திருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை, ஆவணங்களை தொடா்ந்து தீவிரமாகச் சரிபாா்த்து வருகிறோம் என போலீஸாா் தெரிவித்தனா்.