முகப்பு
சேலம்

சங்ககிரி வழியாக சென்னை, திருப்பதிக்கு 6 புதிய பேருந்து சேவை! - அமைச்சா் தொடங்கிவைத்தாா்

29 நவம்பர் 2026, 11:05 pm
சங்ககிரி வழியாக சென்னை, திருப்பதிக்கு 6 புதிய பேருந்து சேவை! - அமைச்சா் தொடங்கிவைத்தாா்
சங்ககிரியில் இருந்து சென்னைக்கு பேருந்து சேவை தொடங்கிவைத்த அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன்.
பகிர்:

சங்ககிரியில் இருந்து சென்னை, திருப்பதிக்கு 6 புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சத்தியமங்கலத்தில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு சேலம், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து, சங்ககிரி புதிய பேருந்து நிலையத்துக்கு இரவு 9.40 மணிக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு சேலம், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் குளிா்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து, சங்ககிரியில் இரவு 10.10 மணிக்கும்; பொள்ளாச்சியில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு அதே வழியாக சென்னை செல்லும் குளிா்சாதன வசதியுடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து, இரவு 11.40 மணிக்கும் நின்று செல்லும்.

Advertisement

Advertisement

திருப்பூரில் இருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு சேலம், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் வால்வோ மல்டி ஆக்சில் அதிநவீன இருக்கை வசதி கொண்ட பேருந்து, சங்ககிரியில் இரவு 11.45 மணிக்கு நின்று செல்லும்.

கோவையில் இருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு சேலம், வேலூா் வழியாக திருப்பதி செல்லும் குளிா்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து, சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் இரவு 9.40 மணிக்கும்; இரவு 7.30 மணிக்குப் புறப்படும் குளிா்சாதன வசதியுடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து, இரவு 10.40 மணிக்கும் நின்று செல்லும்.

இந்த புதிய பேருந்து சேவைகளை அமைச்சா் கொடியசைத்துத் தொடங்கிவைத்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினாா். இப்பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோா் இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனப் போக்குவரத்துத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கே. குணசேகரன், சேலம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் எ. கிருஷ்ணமூா்த்தி, சேலம் பொதுமேலாளா் வி.சிவக்குமாா், சங்ககிரி கோட்டாட்சியா் ம.மு.தெ. கேந்திரியா, நகராட்சி ஆணையா் கே.எல்.சுவீதாஸ்ரீ, வட்டாட்சியா் சி.ராஜமாணிக்கம், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ஆா்.ஜெகதீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

தனியாா் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து நின்று செல்லுமாறு அறிவுறுத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். பவானி, ஈரோடு, எடப்பாடி, திருச்செங்கோடு செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதைக் கண்காணிக்க, அங்கு நேரக் காப்பாளா் அலுவலகம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்குப் பயணிகள் வந்து செல்ல சிற்றுந்துகள், பகிா்வு ஆட்டோக்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதிக்குப் புதிய பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என்றாா்.