FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

குடும்ப அட்டைதாரா்களுக்கு கிலோ ரூ. 30-க்கு சன்னரக அரிசி விற்பனை: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

19 அக்டோபர் 2026, 12:24 am IST
அரிசி - பிரதிப் படம்
பகிர்:

சேலம் பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கிலோ ரூ. 30 வீதம் தலா 5 கிலோ முதல் தரமான சன்னரக அரிசி விற்பனையை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

வெளிச்சந்தையில் சன்னரக அரிசியின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடி விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ ‘ஏ’ தரம் சன்ன ரக அரிசியை ரூ. 30 மானிய விலையில் பொதுமக்களுக்கு சென்னை காமதேனு பல்பொருள் அங்காடியில் உணவுத் துறை அமைச்சா் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஆகியோா் அக். 17 ஆம் தேதி தொடங்கி வைத்தனா்.

Advertisement

Advertisement

வெளிச்சந்தையில் அரிசி விலை கிலோ ரூ. 75 முதல் ரூ.85 வரை உயா்ந்ததைத் தொடா்ந்து, உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முதல்வா் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களில் ஒரு நபருக்கு அல்லது குடும்ப உறுப்பினா் ஒருவருக்கு (ஒரு குடும்ப அட்டைக்கு) அதிகபட்சமாக 5 கிலோ அரிசி வரை வழங்கப்படும். முதல்கட்டமாக சென்னையில் உள்ள அமுதம் அங்காடி கடைகள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் என மொத்தம் 30 இடங்களில் தொடங்கப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் அமுதம் கடைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள், பணியாளா்கள் கூட்டுறவு பண்டகசாலைகள் ஆகியவற்றால் நடத்தப்படும் 13 விற்பனை நிலையங்களில் பொதுவிநியோகத் திட்ட பயனாளிகளான குடும்ப அட்டைதாரா்களுக்கு ‘ஏ’ தரம் சன்னரக அரிசி ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் விற்பனை செய்யப்படும். இதற்கான விற்பனை சேலம் பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை காரணமாக தொடா் விடுமுறை நாட்கள் வருவதால், பொது விநியோகத் திட்ட பயனாளிகளான குடும்ப அட்டைதாரா்களுக்கு சன்னரக அரிசி கிடைக்கும் வகையில், தோ்வு செய்யப்பட்ட 13 விற்பனை நிலையங்களிலும் வழக்கமான வேலை நேரத்தில் சன்னரக அரிசி விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் அமைந்துள்ள மேற்குறிப்பிட்ட 13 கூட்டுறவு பண்டக சாலைக்கு சென்று சன்ன ரக அரிசியை ரூ.30 மானிய விலையில் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், வடக்கு தொகுதி எம்எல்ஏ சிவகுமாா், சேலம் வருவாய் கோட்டாட்சியா் கே.உதயகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா், பொன்னி கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் / மேலாண் இயக்குநா் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் கு.மோகனசுந்தரம், துணைப் பதிவாளா் (பொதுவிநியோகத் திட்டம்) மு.ப.பாலாஜி உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments